இந்திரஜித் – திரை விமர்சனம்!

இந்திரஜித் – திரை விமர்சனம்!

இப்போதெல்லாம் ஒரு சினிமாவை உருவாக்க குறைந்த பட்சம் ஐம்பது லட்சம்  முதல் ஒரு கோடி வரை மினிமம் செலவாகிறது என்பதும் அப்படி எடுக்க பட்ட பல படங்கள் ரிலீஸாகமல் முடங்கி கிடக்கின்றன என்பது மட்டுமின்றி வெளியான படங்களில் பல பார்ப்போரை அப்செட் அடைய செய்கிறது என்பதுதான் உண்மை. இச்சூழ்நிலையில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மனைவி, குழந்தை என்று சகலரையும் ஒரு தியேட்டருக்கு அழைத்து போய் ஒரு சினிமா-வை காட்டி விட்டு திரும்பும் போது அந்த குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேரும் முகம் சுளிக்காமல் வீடு திரும்புவதென்பது அரிதான விஷயமாகி விட்டது, அந்த வகையில்  இன்று ரிலீஸாகி இருக்கும் ; இந்திரஜித்’ ஒரு பேமிலியில் உள்ள அத்தனை பேரையும் திருப்திப் படுத்த முயன்று இருக்கிறது என்பதுதான் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

ஆம்.. நேரம் போக்க தியேட்டருக்கு வந்திருப்போரின் முகத்தில் ஸ்மைலி-யை ஏற்படுத்துவது மட்டுமே என்ற ஃபார்முலாவை நன்கு புரிந்து நச் என்று இரண்டே மணி நேரத்தில் ஒரு பொழுது போக்கு சமாச்சாரத்தை அளிக்க முயன்று இருக்கிறார் சக்கரக்கட்டி இயக்குர் கலா பிரபு. அதிலும்  படத்தின் கதையை டைட்டிலிலேயே சொல்லி விட்டு அதை அடுத்து ஹீரோ-வின் இன்னோசென்டை மட்டுமே கொஞ்சம் நீளமாக சொல்லி இந்த கதையே ஜஸ்ட் ஃபன்தான் என்பதை உணர்த்தி விட்டார் , அதை அடுத்து தொடரும் கதைப்படி மத்திய தொல்லியல் ஆராய்ச்சித் துறை இயக்குநராக இருந்தவர் சச்சின் கடேகர். இவர் ஏதோ ஒரு காரணத்திற்கு பிறகு தன் கவர்மெண்ட் ஜாப்-பில் இருந்து விலக்கப் பட்ட நிலையில் புரொபசராக தன் ஆராய்ச்சிப் பணியைத் தொடர்கிறார்.  அது என்னவென்றால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனிலிருந்து தெறித்து வரும் ஒரு பொருள் பூமியில் வந்து விழுகிறது. அந்தப் பொருளுக்கு காயங்களையும், நோய்களையும் குணப்படுத்தும் சக்தி இருப்பதால் சித்தர்கள் அதை ஒரு ரகசிய இடத்தில் வைக்கிறார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு அந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்பது தெரியாமலேயே போய்விடுவதை கண்டறிய தனக்கு என சில மாணவர்களை பயன்படுத்து அறிந்து கொள்ள முயல்கிறார் (கள்) .இதை மோப்பம் பிடித்து விட்ட தொல்லியல் துறையின் லேட்டஸ்ட் இயக்குநர் சுதான்ஷு பாண்டே அதற்குத் தடையாக இருக்கிறார். இப்படியான சூழலில் சச்சினின் டீமில் கெளதம் கார்த்திக் இணைந்து அந்த விண்கல் இருக்கும் இடத்தை எப்படி கண்டறிகிறார்கள், அந்த விண்கல்லை தேடிப் போகும் பயணத்தில் யாருக்கு என்ன நேர்கிறது?அந்த விண்கல் கையில் கிடைத்ததா? அதன் விளைவுகள் என்ன என்பது இந்திரஜித் ஸ்கீரின் பிளே..!

இன்னும் கொஞ்சம் சிம்பிளாக சொல்வதானால் ராமாயணத்தின் வில்லனான ராவணனின் மகன்  இந்திரஜித் தனது தந்தையைப் போலவே சிவபக்தர். கடும் தவத்தினால் அவருக்கு ஒரு சிவலிங்கம் கிடைக்கிறது. அந்த சிவலிங்கத்தின் சக்தியால் எல்லாப் போர்களிலும் வெற்றிபெறுகிறார் என்ற கதையை கேட்டதுண்டு இல்லையா?. அந்தச் சிவலிங்கத்தின் மீது கொஞ்சம் டெக்னாலஜி  டச்சப் செய்து நோய்களை நீக்கும் சக்தி வாய்ந்த விண்கல்லாக மாற்றி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

ஆனாலும் பக்கத்து சீட் பத்திரிகை நண்பர் சொன்னது போல், “புதையல் தேடிப் புறப்படும் பல கதைகள் கலைஞர் காலம் தொடங்கி தமிழில் அடுத்தடுத்து வெளி வந்திருந்தாலும், ஹாலிவுட் படங்களைப் போல எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. கை வசம் கிடைக்கும் தொழில் நுட்பங்களை முழுமையாக உபயோகிக்காமல் தோற்றுப் போன தமிழ்ப் படங்கள் எக்கச்சக்கம். ஆனால், இந்த ‘இந்திரஜித்’ படம் சிறந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் மற்றும் பேண்டஸி படமாக உருவாகியிருப்பதாகக் கூறப்பட்டது. குறிப்பா டிரைலரில் ட்ரெக்கிங், சேஸிங் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தன. ஆனா ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுசா பூர்த்தி செய்யலையே இந்த ‘இந்திரஜித்’?” என்ற முணு முணுப்பு கொஞ்சம் உரக்கவே கேட்கிறது.

ஆனாலும் ஆரம்பத்திலேயே சொன்னது போல் சகல தரப்பினரையும் திருப்தி படுத்தும் விதத்திலேயே கதை நகர்கிறது. குறிப்பாக கெளதம் கார்த்திக் நடிப்பில் இந்த ஆண்டு வெளி வந்திருக்கும் இந்த ஐந்தாவது படத்தில்தன் அப்பா-வை நினைவுறுத்துவது போலவே குறும்பு, பேச்சு, மேனரிசம் மற்றும் சேட்டைகள் செய்யும் புத்திசாலி ஹீரோவாக தன்னை வெளிப்படுத்தி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

ஆனாலும் இண்டியானா ஜோன்ஸ் பாணியிலான, மாய குணங்கள் கொண்ட ஒரு புதையலை கண்டு பிடிக்கும் அரத பழசான கதைதான். அதற்கு பூசிய மூலாம்தான் பல்லை இளித்து விட்டது. பிரமாண்டத்துக்கு பேர் போன கொண்ட தயாரிப்பாளரின் அருமை புத்திரன் இந்த கதையை சினிமா-வாக்கியதில் கொஞ்சம் அசட்டை செய்து விட்டார் என்று அப்பட்டமாக தெரிகிறது. இது போன்ற புதையல் கதையை முத்து காமிக்ஸ் டீம் கூட லாஜிக் மீறாமல் கொடுத்து வரும் சூழ் நிலையில் தேவைப்படும் அளவிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தும் ஆரம்பத்தில் சொன்னது போல் ஒரு பேமிலியில் உள்ள சகல தரப்பினரையும் திருப்தி படுத்த முயன்று இருப்பதற்க்காகவே ஒரு ஸ்பெஷல் பொக்கே.!

 

error: Content is protected !!