February 8, 2023

தொழிலாளர் புதிய சட்டங்கள் கொண்டு வருவதில் அவசரம் வேண்டாம் – ரமேஷ் பாபு

ந்தியாவின் பழமையான தொழிலாளர் சட்டங்களை நான்கு லேபர் கோட்களாக பிரித்து புதிய சட்டமாக வருகின்ற புதிய நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இது குறித்து மாநில அரசுகளின் இறுதி வடிவத்திற்காக மத்திய அரசு காத்திருக்கிறது. ஏனெனில் தொழிலாளர் விவகாரம் மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் இருப்பதால் இச்சட்டத்திற்கு ஏற்றபடி மாநில அரசுகளும் தங்களுடைய சட்டங்களை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை ஒரு சில மாநில அரசுகளே இது குறித்து முழுமையாக நடவடிக்கை எடுத்துள்ளன. மீதமுள்ள மாநிலங்கள் இன்னமும் முழுமையாக புதிய சட்ட விதிகளை உருவாக்கவில்லை. எனவே இப்புதிய சட்டத்தின் நடைமுறைப்படுத்தல் நிகழ மேலும் சில மாதங்கள் ஆகலாம். எனினும் இச்சட்டங்கள் கொண்டு வரும் மாற்றங்கள் எவை என்பது குறித்தும் அவை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்தும் நாம் காணலாம்.

இந்த நான்கு புதிய சட்டங்களும் கூலி/சம்பளம், தொழிற்சாலை உறவுமுறை விதிகள், சமூகப் பாதுகாப்பு விதிகள் மற்றும் தொழில் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணிச்சூழல் விதிகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவ்விதிகள் குறித்து மத்திய-மாநில அரசுகள் நூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை கொண்டுள்ளன. எனவே இவற்றை எளிமைப்படுத்தி, திருத்தி வகுத்துக்கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்யேகமான சூழலைப் பொறுத்து சட்டங்களும் மாறுபடுகின்றன. இப்புதிய சட்டங்கள் வர்த்தக நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களை நடத்தும் விதத்தையே மாற்றப்போவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். தற்போதுள்ள சட்டங்களின்படி 300 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களே பணி நீக்கம், நிறுவனத்தை அடைத்தல் மற்றும் குறைத்தீர்த்தல் ஆகியவற்றை செய்ய இயலும். ஆனால் புதிய சட்டத்தின்படி 100 ற்கும் குறைவான தொழிலாளர்களுள்ள நிறுவனங்கள் கூட இச்செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். அதே போல 75% தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற தொழிற்சங்கங்களே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இயலும். இச்சட்டத்தால் நிகழப்போகும் பாதகம் தொழிலாளர்களை குறுகிய கால ஒப்பந்தத்தின் கீழ் பணி புரிய வைத்து விட்டு பின்னர் பணி நீக்கம் செய்து விடலாம் என்பதாகும். ஆனால் மத்திய அரசோ இந்த விதியினால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏதும் ஏற்படாது என்றும், அதிக வேலைவாய்ப்புகளையே இச்சட்ட விதி ஏற்படுத்தும் என்றும் வாதிடுகிறது.

பணி நிரந்தரம் அற்றச் சூழ்நிலையை சரி செய்யும் விதமாக இனி மேல் தற்காலிக தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்கள் போல அனைத்து பணிக்கால சலுகைகளையும், ஓய்வூதியம் போன்ற சலுகைகளையும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. இதில் மகப்பேறு கால சலுகைகளும் கூட அடங்கும். இப்புதிய விதியால் ஒப்பந்தத் தொழிலாளர்களும் கூடப் பயன் அடையலாம். இது நாள் வரை ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிப்புரியும் ஊழியர்கள் மட்டுமே பெற்று வந்த பணிப்பலன் இத்தொழிலாளர்களுக்கும் கிடைக்கும். மேலும் மத்திய அரசு சமூக நலப் பலன்களை இடம் பெயர் தொழிலாளர்களும் பயன் அடையும் விதத்தில் தனி நிதியத்தை ஏற்படுத்தப்போவதால் அவர்களும் பலன் அடைவார்கள்.

இச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய முக்கிய மாற்றம் கையில் கிடைக்கும் சம்பளம் குறைந்து சேமிப்பு அதிகரிக்க வழிப்பிறக்கிறது என்பதாகும். அத்துடன் மத்திய அரசு பல மாநிலங்களிலுள்ள வாழ்க்கைத் தரத்தினைக் கணக்கில் கொண்டு குறைந்தபட்சக் கூலி அளவை நிர்ணயம் செய்யவுள்ளது. மாநில அரசுகள் இந்தக் குறைந்தபட்சக் கூலி அளவை விடக்குறைவாக கூலியை நிர்ணயம் செய்ய முடியாது. மேலும் பாலின ரீதியில் கூலி/சம்பளத்தில் வேறுபாடு காட்டுவதையும் இப்புதிய சட்ட விதிகள் தடை செய்கின்றன. உண்மையிலேயே இந்த விதி மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடியதாகும். பெண்கள் அதிகம் பொருள் ஈட்டினால் குடும்பப் பொருளாதாரம் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. என்றாலும் ஆண்களின் குடிப்பழக்கம் போன்ற தீமைத் தரும் பழக்க வழக்கங்களும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

அனைத்திற்கும் மேலாக உலக வழக்கை ஒட்டியபடி வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை நாள் எனும் மாற்றத்தையும் இச்சட்டம் பரிந்துரைக்கிறது. இதன்படி ஒவ்வொரு தொழிலாளரும் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பணிபுரிந்தால் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்தால் போதும். இந்த மாற்றமும் வாழ்க்கை- வேலை பணி நேர வேறுபாடுகளைக் குறைத்து குடும்பங்களுடன் அதிக நேரம் செலவிடவும், ஓய்வு எடுக்கவும், சொந்த வேலைகளுக்கு நேரம் ஒதுக்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும். இச்சட்டத்தை வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்ட நிலையில் பெரும்பாலான மாநிலங்கள் தங்களது சட்டங்களை வகுக்கும் முயற்சியில் மெதுவாக செயல்படுவது நடைமுறைப்படுத்தும் தேதியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு