October 16, 2021

நம் நாட்டிலுள்ள 50 சதவிகித நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது! – மத்திய அரசு தகவல்!

உலகம் முழுக்க மொத்தம் 66.3 கோடி பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். அதில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் இந்தியாவில் உள்ள கிராமங்களில் வாழ்பவர்கள். சுத்தமான குடிநீர் எடுப்பதற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய கட்டாயத்தால் கிராமங்களில் வாழும் பெண்களின் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது.குறிப்பாக குடிநீர் எடுக்கச் செல்லும் பெண் குழந்தை களின் கல்வி பாதிப்புள்ளாகியிருக்கிறது. ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையின் படி 2050ல் உலகில் 40 சதவிகிதம் பேர் சுத்தமான குடிநீர் இன்றி தவிப்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் ஆண்டுக்கு 3 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் தண்ணீர் பிரச்சனைகளால் உயிரிழப்ப தாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுத்தமான குடிநீர் இல்லாத காரணத்தால் ஊட்டச்சத்தின்மை குறைபாடு வியாதிகள் 50 % மேல் அதிகரித்திருக்கிறது என்று முன்னரே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் இந்தியா முழுவதும் 50 சதவிகித நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது என்று மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஆம்.. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப் படும் கழிவுகள் ஆகியவற்றின் விளைவுகளால் இந்தியாவிலுள்ள நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது. குடிநீரில் நைட்ரேட் கலந்தால் இரத்தத்தின் திறனில் குறைவு ஏற்படும், ஆர்சனிக் கலந்திருந்தால் தோல் புற்றுநோய், சிறுநீர்ப்பை, சிறுநீரக மற்றும் நுரையீரல் புற்றுநோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இனப்பெருக்கக் குறைபாடுகள் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் இந்தியாவில் உள்ள நிலத்தடி நீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு கடுமையான உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. நிலத்தடி நீர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், நிலத்தடி நீரில் புளூரைடு, இரும்பு, ரசாயனங்கள் போன்றவற்றின் அளவு கவலை தரும் அளவிற்கு அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் அளவுக்கு அதிகமாக புளூரைடு, நைட்ரேட்கள் போன்ற ரசாயனங்கள் கலந்துள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 386 மாவட்டங்களில் நைட்ரேட், 335 மாவட்டங்களில் புளூரைடு, 301 மாவட்டங்களில் இரும்பு, 212 மாவட்டங்களில் உப்பு, 153 மாவட்டங்களில் ரசாயனம், 30 மாவட்டங்களில் குரோமியம், 24 மாவட்டங்களில் காட்மியம் ஆகியவை நிலத்தடி நீரில் அளவிற்கு அதிகமாகவே உள்ளன என்றும் சில மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீரில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்த்தக்கது.