செல்லுலாய்ட் மனிதர் ‘ பி.கே.நாயர்’!
இலக்கியமோ, சினிமாவோ, இசையோ ,ஒவியமோ எதையும் முறையாக ஆவணப்படுத்தும் பழக்கம் நம்மிடமில்லை. புதுமைப்பித்தனின் கையெழுத்துப் பிரதிகள் அத்தனையும் நம்மிடம் இல்லை. பாரதியின் குரல் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள ஒலிப்பதிவு எதுவுமில்லை. தி.ஜானகிராமனின் மோகமுள்ளின் கையெழுத்து பிரதியை ஒருவர் வாசிக்க விரும்பினால் வாய்ப்பே கிடையாது. இது தான் நமது சூழல். சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்கள் கூட முறையாகப் பாதுகாக்கபடவில்லை. அதிலும் குறிப்பாக மௌனப்படங்களில் பெருமளவு அழிந்து போய்விட்டன. இந்திய சினிமாவின் அரிய படங்களைக் காணுவதற்கு உள்ள ஒரே வாய்ப்பு பூனே திரைப்படக்கல்லூரியிலுள்ள இந்திய திரைப் பட ஆவணக்காப்பகம் மட்டுமே. அதை உருவாக்கியர் பி.கே.நாயர்.
இந்தியாவின் முதல் படம் துவங்கி முக்கியப் படங்கள் அத்தனையும் தேடித்தேடி சேகரித்து ஆவணப் படுத்தியவர் நாயர். உலகச் சினிமாவின் முக்கியப் படங்களும் கூட இங்கே ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. பி.கே.நாயர் இவற்றைத் திரைக்கலை பயிலும் மாணவர்களுக்குப் பாடமாகத் திரையிட்டு கற்றுத் தந்தார். பொதுமக்கள் ரசிக்கும் படியாகப் பொதுதிரையாடலை உருவாக்கினார். சின்னஞ்சிறிய ஊர்களுக்குக் கூட உலகச் சினிமா சென்று சேர வேண்டும் என்று பிரிண்டை அனுப்பித் திரையிடச் செய்தார்.
அப்பேர்பட்ட பரமேஸ் கிருஷ்ணன் நாயர் (பி.கே.நாயர்) 1933ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளமைப்பருவத்திலேயே அவருக்கு சினிமா வின் மீதான ஆர்வம் மேலோங்கியிருக்கிறது. திருவனந்தபுரத்திலுள்ள சினிமா தியேட்டருக்கு தினமும் இரவுகாட்சி காண போய்விடுவார். சினிமா டிக்கெட்டின் பாதியை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வார். சினிமா இயக்குனராக வேண்டும் என விரும்பி உதவியாளராகப் பணி யாற்றினார். ஆனால் ஸ்டுடியோ அனுபவம் அவரது மனதை மாற்றியது. சினிமாவை கற்று தருவதிலும் சினிமாவை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்டத்துவங்கினார்.
குறிப்பாக 1940களில் வெளியான, படங்களான, கே.சுப்ரமணியத்தின், ”அனந்தசயனம்”, ”பக்த பிரகலாதா”படங்களைச் சொல்லலாம். ஆனாலும், இவரது சினிமாவின் ஆசைக்கு குடும்பத்தில் ஒருந்து போதிய ஆதரவுகள் கிடைக்கவில்லை.
பின்னர் 1953ல் கேரளப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவுடன், தனது திரைப்பட ஆசையைத் தொடர பம்பாய்க்குச் சென்றுவிட்டார். பம்பாயில் படப்பிடிப்பு நுணுக்கங் களையும், சினிமா எடுக்கும் முறையையையும், அப்போது பிரபலமாகயிருந்தவர்களான, மெஹபூப் கான், பிமல் ராய், ஹிரிஷ்கேஷ் முகர்ஜி போன்றோரிடம் பயிலும் வேளையிலேயே, திரைப்படத் துறையில் பிறரைப் போல சாதிக்க தனக்கு இன்னும் தகுதிகள் வேண்டுமென்றும், திரைப்படக் கல்வித் துறை சார்ந்து தான் செயல்பட்டால் தன் எதிர்காலம் நன்றாகயிருக்கும் என்பதையும் புரிந்துகொண்டார்.
1961ஆம் ஆண்டு, பூனே திரைப்படக் கல்லூரியில் உதவி ஆய்வாளராகப் பணியில் அமர்ந்தார். அங்கு பேராசிரியர்களாக இருந்த மரியா செடோன், மற்றும் சதீஸ் பகதூர் ஆகியோருடன் இணைந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு “சினிமா ரசனை” வகுப்புகள் எடுக்கத் தொடங்கினார். அவர் பணியாற்றிய காலத்தில் படித்தவர்களே இன்று இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்கள்.
பின்னர்., 1964லிலிருந்து இந்திய தேசிய திரைப்பட ஆவணக்காப்பகத்தின் (NFAI) நிறுவனர் மற்றும் இயக்குனராகவும் இருக்கிறார். இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய திரைப்படங்களை, அர்ப்பணிப்போடு NFAIக்கு கொண்டுவந்திருக்கிறார்.
பல முக்கியத் திரைப்படங்கள் பி.கே.நாயர் அவர்களின் பெருமுயற்சியால் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவருகின்றன. அவற்றுள் சில: தாதா சாகேப் பால்கேயின் ‘ராஜா ஹரிச்சந்திரா’ மற்றும் காலிய மர்தன், எஸ்.எஸ்.வாசனின் ‘சந்திர லேகா’, உதய் சங்கரின் ‘கல்பனா’, ”மார்த்தாண்ட வர்மா”, பாம்பே டாக்கிஸின் படங்களான ”ஜீவன் நையா”, ”பந்தன்”, ”கங்கன்”, ”அச்சுத் கன்யா”, மற்றும் ”கிஸ்மத்” முதலானவை அடங்கும். பி.கே.நாயரின் வாழ்க்கையைக் குறித்து ஆவணப்படம் ஒன்றும் “செல்லுலாய்ட் மேன்” என்ற பெயரில் சிவேந்திரா சிங் துங்கர்பூர் என்பவரால் எடுக்கப் பட்டிருக்கிறது. இப்படம் பல விருதுகளையும் வென்றுள்ளது.
நாயர் அரும்பாடுபட்டு சேர்த்த திரைப்படங்கள் இன்று முறையாகப் பராமரிக்கபடவில்லை. அவரைப் போலச் சினிமாவை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்கள் இன்று உருவாக வுமில்லை. சினிமா கலைப்படமோ வணிகப்படமோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அது உயிர்வாழ வேண்டும். அற்ப காலத்திற்குள் அழிந்துவிடக்கூடாது,.
சினிமா என்பது வெறும் காட்சிபிம்பங்களில்லை. அவை மனித வாழ்வின் ஆவணங்கள். காலத்தின் சாட்சியங்கள். மனிதர்கள் கண்ட கனவுகளின் தொகுப்பு. நூறு ஆண்டுகாலம் கடந்து போனால் இன்று குப்பை என நாம் ஒதுக்கும் படம் கூட முக்கியமான வரலாற்றுச் சாட்சியம் ஆகிவிடும். ஆகவே திரைப்படங்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார். சினிமாவை பாதுகாக்க முறையான பாதுகாப்பு கலன்களும் குளிர்பதனம் செய்யப்பட்ட இடமும் பராமரிப்பு செலவும் தேவை. அதில் இந்திய அரசு அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை
ஆண்டிற்கு இருநூறு முந்நூறு திரைப்படங்களைத் தயாரிக்கும் தமிழ் திரையுலகில் இது போல ஒரு ஆவணக்காப்பகம் கிடையாது. அரசு இதைச் செய்ய உடனே முன்வர வேண்டும். டிஜிட்டில் வடிவில் அவை பாதுகாக்கபடுவது எளிதானது. அது போலச் சினிமாவை ஆய்வு செய்ய விரும்புகிறவர் களுக்கான மையம் ஒன்றை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடக்காமல் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியாது
அப்படியெல்லாம் சினிமாவுக்காக உழைத்த பி.கே.நாயர் என்ற அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட மனிதர் இதே நாளில்தான் காலமானார்.