September 25, 2021

ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்து ;இந்திய மருத்து கட்டுப்பாட்டு துறை உத்தரவு!

நம்ம நாட்டில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பவுடரை எல்லாம்  நம்பறதை விட ஜான்சன் பேபி பவுடர்தான் என் குழந்தைக்கு பாதுகாப்பு  என்று அடித்துச் சொல்வார்கள் பல தாய்மார்கள். ஹூம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இதே நிலைதான்.  இந்நிலையில் இந்தியாவில் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்தின் பேபி பவுடர் மாதிரிகளின் சோதனை முடிவுகள் நிரூபிக்கப்பட்டு அதன் அறிக்கை வரும் வரை பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்துமாறு இந்திய மருத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் இன்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், குழந்தைகளுக்கான பவுடர், சோப், எண்ணெய் ஆகியவற்றைத் தயாரிக்கிறது. இந்தப் பொருள்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இதனிடையே  ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற கல்நார் இழைப் பொருள் கலக்கப்படுவதாகவும் ராய்ட்டர்ஸ் (Reuters) பத்திரிக்கை கடந்த டிசம்பர் 14ம் தேதி ஒரு கட்டுரையில் வெளியிட்டுள்ளது.  ஆஸ்பெஸ் டாஸ் என்ற பொருள் கலக்கப்படுவதால் புற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

இதையொட்டி ஜான்சன் தயாரிப்புகள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த இவா எச்வேரியா என்ற பெண் கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கு ஜான்சன் பேபி பவுடர்தான் காரணம் என கண்டுபிடித்த அவர் லாஸ் ஏஞ்சலஸ்  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 11 வயதில் இருந்தே ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தி வருவதாகவும், இதனால்தான் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு 417 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதோடு இச்சம்பவத்தை பலர் மறந்து விட்டனர்

தற்போது ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் பேபி பவுடரில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அதில் ஆஸ்பெஸ்டாஸ் துகள் இருப்பது அமெரிக்க நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.  இந் நிலையில் இந்தியாவில் இயங்கி வரும் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனத்தின் பேபி பவுடர் மாதிரிகளை ஆய்வு செய்ய மத்திய மருந்துப்பொருள் தரக்கட்டுப்பாட்டு நிறுவன ஆய்வாளர்கள் முன்வந்தனர்.

இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மருந்து ஆய்வாளர்கள் குழு நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 19ம் தேதி பேபி பவுடர் உற்பத்தி செய்யும் இடம், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர் கள் குடோன்களில் பேபி பவுடர் மாதிரிகளை சேகரித்தனர்.அந்த  பேபி பவுடர் மாதிரிகளின் சோதனை முடிவுகளில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற பொருள், அல்லது அதில் எவ்வித கலப்படமும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டு அதன் அறிக்கை வரும் வரை பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் இன்று உத்தரவிட்டுள்ளனர்.

ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவன பேபி பவுடர், பேபி சோப், பேபி எண்ணெய் ஆகியவற்ரின் மாதிரிகளையும் ஆய்வுக்காக ஆய்வாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.