சீஃப் ஜட்ஜ் மீதான மீ டூ புகார் தள்ளுபடி : நீதிபதிகள் குழு அதிரடி!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் அளித்த பாலியல் புகாரை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்பு குழு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். இது இந்திய அளவில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தன் மீதான பாலியல் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்திருந்தார் ரஞ்சன் கோகாய். இந்தக் குழுவில் நீதிபதி பாப்டே தலைமையிலான குழுவில் இந்திரா பானர்ஜி, இந்து மஸ்கோத்ரா இடம்பெற்றிருந்தனர். இதில் பலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகாரில் எந்த ஆதாரங்களும் இல்லை என்று நீதிமன்றகுழு தெரிவித்துள்ளது.

இந்த விசாரணைக்குழுவில் இருந்த நீதிபதிகள், ‘உள் விசாரணைக்குழு நடத்திய விசாரணையின் விவரங்கள் பொதுவெளியில் வெளியாகாது.தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரில் எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்ததுடன் பெண் அளித்த பாலியல் புகாரை தள்ளுபடி செய்து நீதிபதி பாப்டே தலைமையிலான சிறப்புக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புகார் சர்ச்சை ஏற்படுத்தியபொழுது, ”நாட்டில் பல முக்கிய வழக்குகள் குறித்த விசாரணைகள், தீர்ப்புகள் வரவுள்ள நிலையில் இதைத் திசை திருப்பத்தான் இதுபோன்று பொய்புகார் பரப்பப்படுகிறது. இதற்குப் பின்னால் பெரிய சக்தி இயங்குகிறது ” என்று தலைமை நீதிபதி சஞ்சய் கோகாய் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.