March 27, 2023

பிரயாக்ராஜ் என மாறியது அலகாபாத்! – உ.பி. முதல்வர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இஸ்லாமிய மன்னர்களை மன்னர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் குறிப்பாக அக்பரை மன்னர் என ஒப்புக்கொள்ள முடியாது. அவர்கள் வைத்த பெயர்கள் அனைத்தையும் மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது எனக் கூறி, தற்போது அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று இந்த அலகாபாத் நகரமாகும். இந்துக்களின் முக்கியமான புனித நகரமாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் நவீன இந்தியாவை உருவாக்கியதில் ஒரு முக்கியமான பங்களிப்பையும் இது கொண்டிருக்கிறது. பிரயாக் அல்லது பிரயாகை என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் வேதங்கள் மற்றும் ராமாயணம் மஹாபாரதம் போன்ற காவியங்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாநகரில் அடுத்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல் கும்பமேளா தொடங்க உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு அலகாபாத் மாநகரின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இதை அடுத்து
தரபிரதேச மாநிலத்தின் மாநகரான அலகாபாத்தின் பெயர் பிரயாக்ராஜ் என அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலாற்று ஆவணங்களின் படி, 1580ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரயாகா என்றே அழைக்கப்பட்டு வந்ததாம். ஆனால் அக்பர் வாழ்ந்த காலத்தில் அவர் இந்த நகரத்தின் பெயரை இல்லகாபாத் என்று மாற்றியுள்ளார். பின்னர் வந்த ஷாஜகான் இதை அலகாபாத் என்று திருத்தினார். அதன் பின்னர் இந்த பெயரிலேயே இத்தனை ஆண்டுகாலம் அழைக்கப்பட்டு வந்த அலகாபாத் தற்போது ரிக் வேதம், மகாபாரதம் மற்றும் ராமாயணம் உள்ளிட்ட நூல்களில் உள்ளபடி பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.