நம்ம சென்னையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ’ பிரமாண்ட கண்காட்சி!

பாதுகாப்பு கண்காட்சி இந்தியா என்ற நிகழ்ச்சி உலகின் மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகி உள்ளது. முதல் முறையாக இந்த பாதுகாப்பு கண்காட்சி சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படையின் செயல்பாடு மற்றும் ராணுவ தளவாடங்கள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்வதற்காக டெல்லி, கோவா உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு துறை சார்பில் கண்காட்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு மந்திரி நிர்மலா சீதாராமன் முயற்சியால் முதன் முறையாக தமிழகத்தில் இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது. சென்னையை அடுத்துள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ள டெபெக்ஸ்போ – 2018 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இக் கண்காட்சியைப் பார்வையிட 14-ம் தேதி பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து, பாதுகாப்புத் துறை செயலாளர் (பாதுகாப்பு தளவாட உற்பத்தி) டாக்டர் அஜய் குமார், கூடுதல் செயலாளர் சுபாஷ் சந்திரா ஆகியோர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

சர்வதேச அளவில் மிகப் பெரிய பாதுகாப்புத் துறை கண்காட்சியான டெபெக்ஸ்போ – 2018 வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை என்ற இடத்தில் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வரும் 12-ம் தேதி கண்காட்சியை முறைப்படி திறந்து வைக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட் டோர் பங்கேற்கின்றனர்.

இதில், 671 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், இந்திய நிறுவனங்கள் 517-ம், 154 வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்கின்றன. மேலும், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, தென் கொரியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நம் நாட்டு பாதுகாப்புதுறை சார்பில் இலகு ரக போர் விமானமான தேஜாஸ், இலகுரக ஹெலிகாப்டர் துருவ், டார்னியர் விமானங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்துடன் உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் நம் நாட்டில் உள்ள கப்பல் கட்டும் தளங்களில் கட்டப்பட்ட கப்பல்களும் மாமல்லபுரம் கடல்பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் ‘ஸ்கார்பியன்’ வகை நீர் மூழ்கி கப்பலும் கலந்து கொள்கிறது.

சென்னையை அடுத்து உள்ள காட்டுப்பள்ளியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தையும் பார்வையாளர் கள் சென்று பார்வையிட முடியும். ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு இந்திய கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கப்பல்கள் கட்டி கொடுக்கப்படுகிறது. இந்த கண்காட்சி மூலம் இந்தியாவின் கப்பல் கட்டும் திறமையும், வலிமையும் வெளிப்படும்.
அத்துடன் 155 மில்லி மீட்டர் மேம்படுத்தப்பட்ட பீரங்கி துப்பாக்கியான தனுஷ், அர்ஜூன் டி-90, டி-70 டாங்கிகள், பாலம் கட்ட உதவும் பீரங்கி வாகனங்கள், ரூ.7.5 லட்சம் மதிப்புள்ள தாக்குதல் துப்பாக்கிகள், ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள ‘கார்பைன்’ ரக துப்பாக்கிகள் மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள இலகுரக துப்பாக்கிகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
இவற்றுடன் இந்தியாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் உற்பத்தி திறன்களை வெளிப்படுத்தும் ‘பிரமோஸ்’ ஏவுகணைகள் மற்றும் பினாக்கா ராக்கெட்டுகளும் கண்காட்சியில் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் இக்கண்காட்சியை முன்னிட்டு இந்திய விமானப் படை, கப்பல்படை மற்றும் ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அத்துடன், இந்தியக் கடற்படையின் போர்க் கப்பல்களும் பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். 14-ம் தேதி இக்கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

இதற்காக, www.defexpoindia.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து அனுமதி பேட்ஜ் ஜைப் பெற வேண்டும். பொதுமக்கள் வந்து செல்வதற்கு வசதியாக பிராட்வே, அடையாறு, தாம்பரம் மற்றும் திருவான்மியூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.