May 15, 2021

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டியில் 7 தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

லக இளையோர் குத்துச்சண்டை போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவு, 51 கிலோ எடை பிரிவுகளில், இந்திய வீராங்கனைகள் ஜித்திகா, பேபிரோஜிசனா சானு ஆகியோர் இன்று தங்கப் பதக்கத்தை வென்றனர்.

உலக இளையோர் குத்துச்சண்டை போட்டி போலந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 48 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை ஜித்திகா 5-0 என்ற கணக்கில் போலந்தின் நாதலியா குக்சிஸ்காவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

51 கிலோ எடைப்பிரிவு இறுதி சுற்றில் இந்திய வீராங்கணை பேபிரோஜிசனா சானு 5-0 என்ற கணக்கில் ரஷியாவின் வாலெரியா லின்கோவாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதேபோல் இந்திய வீராங்கனைகள் பூனம் (57 கிலோ), வின்கா (60 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் தங்கத்தை தட்டிச் சென்றனர்.

இளையோர் குத்துச்சண்டை போட்டியில் மொத்தம் 8 இந்தியர்கள் இறுதிச் சுற்றுக்கு நுழைந்தனர். அதில் 7 பேர் பெண்கள். இறுதிச்சுற்றுக்கு நுழைந்த 7 பெண்களும் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்றிருப்பது சாதனையாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, இளையோர் குத்துச்சண்டையில் 2017 ஆம் ஆண்டில் 5 தங்கப்பதக்கம் வென்றதே இந்தியாவின் அதிகபட்ச வெற்றியாக இருந்து வந்துள்ளது. அதனை முறியடித்து, இந்த ஆண்டு 7 பதக்கங்களை இந்திய இளையோர் பிரிவில் பங்கேற்ற வீராங்கணைகள் வெற்றி பெற்று சாதித்துள்ளனர்.