January 22, 2022

வனப்பகுதியில் வசிப்போரை உடனடியாக அகற்று?சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் சர்ச்சையும்!

நம் நாட்டில் ஏராளமான பழங்குடிகள், ஏற்கெனவே அரசாங்கத்தால் தங்களின் பூர்வீக இடங்களான மலைப் பகுதிகளை விட்டு வெளியேற்றப்பட்டு, தரைவாழ்ப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டு இருக்கிறனர். இன்றைக்குத் தங்கள் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்க முடியாதவர்களாகவும். சொந்த நிலங்களை இழந்தவர்களாகவும், தங்களின் பூர்வீகமான மலைக்குள் செல்லக்கூட அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு செல்ல வேண்டிய கட்டாயச் சூழலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர். குடியிருப்புப் பகுதிகளில் போதுமான குடிநீர், மின்சாரம், சாலை, கழிப்பறைகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், பேருந்து என எந்த வசதிகளும் இன்றி அவதிப்படுகின்றனர். உண்மையில், மலைப் பகுதிகளைவிட்டு அரசாங்கம் நம்மைக் கீழே இறக்கிவிட்டதே என்று நினைத்து ஏங்கும் சூழ்நிலையில் வனப்பகுதியில் வசிப்பதற்கான பட்டா மனுக்கள் நிராகரிக்கப் பட்டதால் நாடு முழுவதும் 11 லட்சத்து 27 ஆயிரம் பேரை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் மற்றும் 9 ஆயிரத்து 29 குடியிருப்புகளை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் வனஉரிமை சட்டம் என்று அழைக்கப்படும் பட்டியல் பழங்குடியினர் மற்றும் பாரம் பரிய வனவாழ் மக்கள் சட்டத்தை 2006ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்தது. அதில் 2005ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பிலிருந்து வனப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அந்த நிலங்களை பட்டாவாக வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சட்டத்தை அமல் படுத்தி னால் மிகப்பெரிய அளவில் காடுகள் அழிப்பு நடைபெறும் என்று ‘வைல்டுலைப் பர்ஸ்ட்’ என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. எனவே சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், சட்டத்தை அமல்படுத்தியிருந்தால் பட்டா இல்லாமல் வசிக்கும் பழங்குடியின மக்களை வனப்பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதனை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த பிப்.13ம் தேதி விசாரித்தது. அப்போது இந்தியாவில் உள்ள 16 மாநிலங்கள் தாக்கல் செய்த அறிக்கையில் ஒட்டுமொத்தமாக 11,27,446 பட்டா மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பட்டா நிராகரிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் பழங்குடியின மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற் றாதது ஏன்? என்பது குறித்த அறிக்கையை மாநில தலைமை செயலாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். பழங்குடியின மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக் கையை தொடங்காமல் இருந்தால் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில் சமர்பிக்கப்பட்டிருந்த பதில் மனுவில், 2005ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதிக்கு முன்பிலிருந்தே வசித்து வந்ததாக கூறி, அதற்கான பட்டா வழங்கக்கோரி 34,302 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 9,029 மனுக்கள் நிராகரிக்கப் பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் 9,029 குடும்பங்களை சேர்ந்த 10,000க்கும் மேற்பட்டோர் தாங்கள் வசிக்கும் வனப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பழங்குடியின ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம் தமிழகத்தில் மொத்தம் 36 வகையான பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். மலைப் பகுதி களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் போதுமான விழிப்புணர்வு இன்றி மலைப் பகுதிகளிலும், மலையையொட்டிய பகுதிகளிலும் வாழ்ந்துவருகிறார்கள். தங்களுக்கு அரசின் சலுகைகள் எத்தனை சதவிகிதம் உண்டு என்றும் அவற்றின் மூலம் எவ்வாறு பயன்பெறுவது என்றும் தெரியாத நிலையில் இருப்பவர்கள் அவர்கள். ஆனால், பழங்குடிகள் என்று சான்றிதழ் வைத்துக்கொண்டு, அவர்களுக்குச் சென்று சேர வேண்டிய உரிமைகளைச் சிலர் கவர்ந்துகொள்வதுதான் வருத்தத் துக்குரிய விஷயம்.

மலைப் பகுதிகளிலேயே வாழ்ந்து பழகிவிட்ட பளியர் இன மக்கள், இன்றும் மலைப் பகுதிகளுக்குச் சென்று மலைப் பொருட்களைச் சேகரித்துவருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அங்கிருந்து கொண்டுவரும் தேன், கிழங்கு, மரப்பட்டை, சாரணத்தி வேர், முருங்கைக் கீரை, பெரண்டை, துளசி, ஆவாரம் பூக்கள், சிறுகுறிஞ்சி, பெரியாநங்கை, கொடி சங்கை, மிளகு நங்கை, வெள்ளை நாகைத் தலைவேர், வண்டுகொள்ளிப்பட்டை போன்ற மூலிகைப் பொருட்களைச் சேகரித்துவைத்து, தங்கள் பகுதிகளுக்கு வரும் இடைத்தரகர்களிடம் விற்பனை செய்கிறார்கள். அதில் கிடைக்கும் சொற்பத் தொகைதான் அவர்களது முக்கிய வருமானம்.

அதே சமயம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள மொத்த பழங்குடியின மக்கள்தொகை 7,94,697 (1.1%). 1971 மக்கள்தொகைக் கணக்கெடுப் பின்போது, தமிழகப் பழங்குடியினர் எண்ணிக்கை 3,11,515. ஆனால், 1981 கணக்கெடுப்பில் இந்த எண்ணிக்கை 5,20,226 ஆக உயர்ந்துவிட்டது. அதாவது, 1971-1981-க்கு இடைப்பட்ட 10 ஆண்டுகளில் மட்டும், பழங்குடி மக்கள் தொகையில் 67% உயர்வு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 50%-க்கும் மேற்பட்டவர்கள் உண்மையான பழங்குடிகளா என்பது கவனிக்க வேண்டிய விஷயம். அரசு ஆய்வாளர்களை வைத்து, களஆய்வின் மூலம் சரிபார்க்கப்பட வேண்டிய முக்கிய விஷயம் இது.

2007-08-ல், பழங்குடியினருக்கான மத்திய அமைச்சரகம் மற்றும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பூரியா குழு (2004) அறிக்கைகள் போன்றவை இவர்கள் பற்றிய புள்ளிவிவரங்களைத் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில், பழங்குடியினர் அல்லாதோர் பழங்குடியினராக உருவாகும் போக்கு அதிகரித்திருக்கிறது என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் தெரிவித்திருப்பதாக பூரியா குழு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது, பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பெறுவதற்காக, பிற சாதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பழங்குடிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். பழங்குடிகள் என்று சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கிறார்கள். பழங்குடியின மக்களுக்காக அனுதாபப்பட்ட காலங்கள் மாறி, இன்று அவர்களின் பங்கைக் கவர்ந்துகொள்பவர்களாகத் தரைவாழ் மக்கள் மாறியிருப்பது கவலை யளிக்கிறது. சமூகநீதியின் உறைவிடமாகப் போற்றப்படும் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தும் பிரச்சினை இது.

இதனிடையே இந்தியாவில் ஏறத்தாழ பத்து கோடி பழங்குடியினர் வசிக்கிறார்கள். ஒரு கணக்கெ டுப்பின்படி 40 லட்சத்திற்கும் மேலான பழங்குடிகள் பாதுக்காக்கப்பட்ட வனப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது இந்திய நிலபரப்பில் 5 சதவீதம். இந்த 5 சதவீத பகுதியில்தான் 500 வன உயிர் சரணாலயங்களும், 90 தேசிய பூங்காக்களும் உள்ளன.

அண்மையில்வந்த நீதிமன்ற தீர்ப்பால் லட்சகணக்கான பழங்குடி மக்களும், காடுகளில் வாழ்வோரும் காடுகளிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இந்திய வன உரிமை சட்டம் மிகவும் ஜனநாயகமான சட்டம், வனத்தை நிர்வகிப்பதில் வனத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். வனம் குறித்து என்ன முடிவெடுத்தாலும் அவர்களிடம் கேட்காமல் எடுக்கக் கூடாது என்கிறது அந்த சட்டம். வனத்திலிருந்து அம்மக்களை வெளியேற்றும் சூழல் வந்தால் அவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தர வேண்டும். ஆனால், அப்படியான எந்த வழிக்காட்டுகளும் இந்த தீர்ப்பில் இல்லை. வனத்தின் பிள்ளைகள் ஒரே நாளில் அகதிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தீர்ப்பானது வனத்தில் வசிக்கும் மக்களை துன்புறுத்த வழிவகை செய்யும் என்று செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகஸ்தீஸ்வரன்