October 16, 2021

பார்லிமெண்ட் எலெக்‌ஷன் ரிசல்ட் : யாருக்கும் முழுசா தேறாதாமில்லே!

வர இருக்கும் பார்லிமெண்ட் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை அதாவது 272 இடங்கள் கிடைக்காது என ஏபிபி நியூஸ் மற்றும் ‘சி’ ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்து கணிப்பு வெளியாகி இருக்கிறது. நம் மக்களவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 543 ஆகும். அதில் சரிபாதி 272 . இந்த அளவு இடங்களை எந்தக் கட்சியும் இம்முறை தனித்து கைப்பற்ற வாய்ப்பு இல்லை என கருத்துக்கணிப்பில் கிடைத்த முடிவுகள் கூறுகின்றன.

நாட்டில் கொஞ்சம் நம்பகத்தன்மை வாய்ந்த ஏபிபி நியூஸ் மற்றும் ‘சி’ ஓட்டர்ஸ் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 233 தொகுதிகளும், காங்கிரஸ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு 167 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டு உள்ளது.

அதாவது பாரதிய ஜனதா கூட்டணிக்கு 38 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும், மற்றவர்களுக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி கூட்டணிக்கு 51 இடங்களும், பா.ஜ.க.வுக்கு 25 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பு விவரத்தில் பாரதீய ஜனதாவை சந்திரசேகர ராவ், அதிமுக, ஜகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோர் ஆதரித்தாலும் 257 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 166 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 143 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனவும் தெரிய வந்துள்ளது.

இதில் தமிழகத்தில் 39 இடங்களில் திமுக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் அதிமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறாது என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவின் மொத்தம் உள்ள 129 தொகுதிகளில், காங்கிரஸ் 69 இடங்களை கைப்பற்றும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு 14 இடங்கள் கிடைக்கும். மற்ற கட்சிகள் 46 இடங்களை பெறலாம்.

நரேந்திரமோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில் 24 இடங்களை பாஜக கைப்பற்றும்.

மேற்குவங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் மம்தா கட்சிக்கு 34 தொகுதிகளும், பா.ஜ.வுக்கு 7 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் 12 காங்கிரஸ் கூட்டணிக்கும், ஒரு தொகுதி பா.ஜ.வுக்கு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.