December 4, 2021

முடங்கும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடர்!

அண்மையில் நான்கு மாநிலங்களில் வெற்றி வாய்ப்பை பறிக் கொடுத்த பாஜக அரசிடம் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கக் கோரி, 60 எம்பிக்கள் கொடுத்த நோட்டீசால் கடந்த 2 நாட்களாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. இப்படி கூட்டாக எதிர்கட்சிகள் கிளப்பும் புயலை சமாளிக்க முடியாமல் மத்திய பாஜக் அரசு திணறுகிறது. இதனால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் ஜனவரி 8ம் தேதி வரை 20 அமர்வுகள் நடைபெறுகிறது. முதல்நாள் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அமைச்சர் அனந்த் குமார் ஆகியோர் மறைவுக்குப் பின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மக்களவை கூடியதும், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி சுனில் குமார் ஜாக்கர் வலியுறுத்தினார். ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக சிவசேனா எம்பி சந்திரகாந்த் காரே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதே போல, சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறி ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் ஜெ.பி. யாதவும் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்தார். ரபேல், ராமர் கோயில் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். பின்னர் பகல் 12 மணிக்கு மக்களவை கூடியதும், உறுப்பினர்கள் சிலரின் கேள்விக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். மேலும், அணை பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பிஜூ ஜனதா தள எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டு விசாரணை கோரி தொடர்ந்து முழக்கமிட்டனர். அமளி அதிகரித்ததால், அவையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

அதேபோல் மாநிலங்களவை கூடியதும், மேகதாது அணை கட்டுவதற்கான அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதைக் கண்டித்து அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல அன்றாட அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி ஆனந்த் சர்மா நோட்டீஸ் அளித்தார்.

உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் அவை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று அவை கூடி யதும், ஆர்பிஐ போன்றவை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தும்படி ராஜ்யசபாவில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ரபேல், ஆர்பிஐ விவகாரம், பண மதிப்பிழப்பு விவகாரங்கள், மேகதாது அணை விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, ராமர் கோயில், கஜா புயல், சபரிமலை விவகாரம் போன்றவை குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு கட்சிகளின் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதனால், இருஅவைகளும் முதலில் 20 நிமிடங்கள், அதன்பின் நண்பகல், அதன்பின் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

கடந்த 2 நாட்களில் மட்டும் 60 எம்பிக்கள் ஒத்திவைப்பு, விவாதத்துக்கு எடுத்துக் கொள்வது தொடர்பான நோட்டீசை மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்களிடம் வழங்கியுள்ளனர். முன்னதாக நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் உள்ள மத்திய பாஜ அரசு, 60 எம்பிக்கள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாலும் பார்லியின் இரு அவைகளிலும் கடந்த 2 நாட்களாக எதிர்க்கட்சிகள் கிளப்பும் புயலை சமாளிக்க முடியாமலும் திணறி வருகிறது. இதனால், நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்று வதில் தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

முக்கிய மசோதாக்கள்

குளிர்கால கூட்டத்தொடரில் 23 மசோதாக்கள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. அதில், 20 மசோதாக்கள் புதியவை. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட 2 மசோதாக்கள் திரும்பப் பெறப்பட உள்ளன. முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு மாற்றான மசோதா, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா, ஒழுங்குபடுத்தப்படாத டெபாசிட் திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா, மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை இந்தத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.