September 17, 2021

பாராளுமன்றத் தேர்தல் எப்போ? – மார்ச் முதல் வாரம் அறிவிப்பு?

மோடியின் இதுவரையிலான ஐந்தாண்டு ஆட்சிக்கான எக்ஸாம் எனப்படும் 2019ம் ஆண்டில் நடக்க வேண்டிய பாராளுமன்றத் தேர்தல் எப்பொழுது நடக்கும் என்ற அறிவிப்பை மார்ச் மாதம் முதல் வாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

தற்போதைய நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் ஜூன் 3-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதனை முன்னிட்டு, புதிய மக்களவைக்கு பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்த 2019 பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெற்றால் போதும். தேர்தலுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரத் தயாரிப்புகளைச்செய்து வருகின்றன..

இந்நிலையில் 2019 தேர்தல் தேதி விபரத்தை தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரம் அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் 6 அல்லது 7 கட்டங்களாக நடத்த வாய்ப்பு உள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு நான்கு கட்டமாக மக்களவை தேர்தலை பிப்ரவரி 29ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஏப்ரல் 20ம் தேதி தொடங்கி, மே 10ம் தேதி முடிந்தது. கடந்த 2009ம் ஆண்டில் 5 கட்ட மக்களவை தேர்தலை, மார்ச் 2ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி முடிந்தது. கடந்த 2014ம் ஆண்டில் மக்களவை தேர்தல் தேதி மார்ச் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. 9 கட்டங்களாக நடந்த தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி முடிந்தது. அதேபோல், இந்த தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவு எட்டப்படவில்லை. எத்தனை கட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலமும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றங்களின் பதவிக் காலமும் 2019 மே மாதத்தில் முடிவடைகிறது. அதனால் மக்களவைத் தேர்தலுடன் இந்த 4 மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தலும் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பும் மக்களவைத் தேர்தல் அறிவிப்புடன் வெளியாகும் என தெரிகிறது.