குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை?

நம் நாட்டின் இமயம் தொடங்கி குமரி வரை அன்றாடம்  எக்கச்சக்கமான நிர்பயாக்களும், ஆசிஃபா-களும் குரூரமாக பலிகடாவாகும் நிலையில் இனி இந்நாட்டில் குழந்தைகளை பாலியல் வன் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீப காலமாக தமிழகம் உள்ளிட்ட ஒட்டுமொத்த இந்தியாவும் பெண்கள் வாழத்தகுதியற்ற நாடாக மாறி வருகிறதோ? என்ற சந்தேகம் சகலருக்கும் எழுகிறது. பாரத மாதா என்று வர்ணித்து கொள்ளும் இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு குழந்தை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பான சி.ஆர்.ஒய் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்த பாலியல் குற்றங்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவை, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் பதிவாகி இருப்பது இந்த ரிப்போர்ட்டில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த இந்த குற்ற செயல்கள், 2016ம் ஆண்டில் 1,06,958 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கையில் உள்ளது.

இத்தகையக் குற்றங்களுக்கு காரணமாக குற்றவாளிகளுக்கு மனித உரிமைகளை ஒதுக்கி வைத்து விட்டு கடுமையான தண்டனைகளை வழங்கி உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரித்து ஒரு மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். இதை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்தாலும் அதை இரு வாரங்களில் விசாரித்து தண்டனை உறுதி செய்யப் பட்டால் அடுத்த ஒரு வாரத்தில் தண்டனையை நிறைவேற்றுவது தான் இத்தகைய குற்றங்களை குறைக்க வகை செய்யும் என்று ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டு கொல்லப் படும் கொடூர சம்பவம் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து குழந்தைகளை பாலினக் கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு குழந்தைகள் பாலினக் கொடுமை (போக்சோ) சட்டத்தில் மரண தண்டனை கொண்டு வரப்படும் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கலாம் என தெரிய வந்து உள்ளது. அதாவது 12 வயதுக்குள் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் போஸ்கோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

அண்மையில் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்போது இருக்கும் போஸ்கோ சட்டத்தில் மரண தண்டனை விதிக்கும் வகையில் ஷரத்து இல்லை. இப்போது நடைமுறையில் இருக்கும் சட்டத்தின்படி மோசமான பாலியல் தாக்குதலுக்கு அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் ஷரத்தே உள்ளது. 2012 ஆம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை விவகாரத்துக்கு பின்பு, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொல்லும் குற்றவாளிகளுக்கு ஏற்கெனவே மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!