January 27, 2022

உங்கள் இணைய பயன்பாட்டை கண்காணிக்க 10 புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி!

மொபைல், டெக்ஸ்டாப் உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மூலம் இணையத்தை, நாம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. அதிலும் கடந்த இருபது ஆண்டுகளில் இணையத்தின் வளர்ச்சி அபரிவிதமானது. இன்று, உலகில் 50% சதவிகிதம் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். 1995ல், 1% சதவிகிதமாக இருந்த எண்ணிக்கை, 2015ல் 40% சதவிகிதமாக உயர்ந்து 2017ல் 50%க்கும் அதிகமாகி உள்ளது. அதிலும் இந்திய மக்கள் தொகையில் 19% சதவிகித மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இணையம் ஒரு அத்தியாவசிய தேவை யாக மாறிவிட்டிருக்கிறது. இந்நிலையில் நாட்டிலுள்ள யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது நாள் வரை கொஞ்சம் கடினமான சூழ்நிலையில்தான் நாட்டிலுள்ள யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கவும், அதனுள் நுழைந்து எந்தத் தகவலையும் பெறவும், பறிமாறிக் கொள்ளப்படும் எந்த தகவல்களை வேண்டுமானாலும் பெற்று சேமித்துக் கொண்டிருந்தார்கள் இந்நிலையில் தற்போது உளவுத் துறை, போதை மருந்து தடுப்புப் பிரிவு, அமலாக்கத் துறை, நேரடி வரிகள் விதிப்பு வாரியம், வருவாய் புலனாய்வு அமைப்பு, சிபிஐ, தேசிய விசாரணை குழு, ரா பிரிவு, சிக்னல் புலனாய்வு இயக்குநரகம், டெல்லி காவல்துறை ஆணையர் ஆகிய 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு (டிசம்பர் 20) அரசாணை பிறப்பித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000இன் படி இவ்வதிகாரம் வழங்கப்பட்டு உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் கணினி சேவை வழங்குபவரும் கணினியின் உரிமையாளரும், தகவலை பெற தேவையான தொழில்நுட்ப உதவிகளை கண்டிப்பாக வழங்க வேண்டும். தகவல்களை அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அரசின் இம்முடிவுக்குத்தான் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் பொருளாளர் அகமது பட்டேல் கூறுகையில், “தொலைபேசி உரையாடல்கள், கணினி தகவல்களை வேவுபார்க்க 10 அமைப்புகளுக்கு மிகப்பெரிய அதிகாரம் வழங்கியுள்ளது கவலைக் குரியது. இது தவறாக பயன்படுத்தப்படலாம்” என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், “இது ஆபத்தானது அல்லவா? ஒட்டுமொத்த கண்காணிப்பு என்பது மோசமான சட்டமாகும். நாட்டின் பாதுகாப்புக்காக என்றால், ஏற்கெனவே பல நிர்வாக முறைகள் இருக்கின்றன. இந்த உத்தரவால் அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள். மக்களே உங்கள் கருத்துக்களை கூறுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவிக்கையில், “அனைத்து இந்தியர்களையும் ஏன் கிரிமினல்கள் போல நடத்துகிறீர்கள்? ஒவ்வொரு இந்தியனை யும் வேவுபார்க்கும் நோக்குடன் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாகும். தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்யும் நெறிமுறைகளை மீறும் செயலாகும். ஆதார் தீர்ப்புகளுக்கு எதிரானதாகும்” என்று விமர்சித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “2014ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்துவருகிறது. குடிமகன்களின் கணிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பதன் மூலம் மோடி அரசு அனைத்து விதி முறைகளையும் மீறி வருகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதை சகித்துக்கொள்ள முடியுமா” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் இதுதொடர்பாக ராஜ்யசபாவில் காங்கிரஸின் ஆனந்த் ஷர்மா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி, “தேசத்தின் பாதுகாப்புக்காகவே கணினிகளை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிகாலமான 2009ஆம் ஆண்டிலிருந்து இருக்கும் கணினி கண்காணிப்புத் திட்டத்தையே தற்போது புதுப்பித்துள்ளோம். இதனை மலையளவு போல் சித்தரிக்கிறீர்கள், ஆனால் இதில் ஒன்றும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்