April 17, 2021

எகிறப் போகும் எலெக்ஷன் எக்ஸ்பென்சஸ்!

கொரோனா கட்டுபாடுகளுக்கு மத்தியில் பீகார் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. சாதாரண காலங்களை விட தற்போது தேர்தல் செலவுகள் தேர்தல் ஆணையத்திற்கு அதிகரித்துள்ளன. தேர்தல் ஆணைய வட்டாரங்களின் கூற்றுபடி, பீகாரில் தேர்தல் செலவுகளில் தொற்றுநோய் தடுப்புக்காக தேர்தல் பணியாளர்கள் பயன்படுத்த ரூ .125 கோடி மதிப்புள்ள ‘பிபிஇ கிட்’கள் வாங்கப்பட்டுள்ளன. கிட்டதிட்ட 6 லட்சம் பேர் தேர்தல் பணியில் உள்ளனர். இது தவிர, தனித்தனி சானிடைசர், கையுறைகள் மற்றும் முகக் கவசங்களும் வாங்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, வாக்காளர்களின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளைச் செய்ய கொரோனா தடுப்பு நடவடிக்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மத்திய அரசு செலவிடுகிறது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல்களில் மாநில அரசு செலவுகளைச் செய்கிறது. தேர்தல் பாதுகாப்பிற்காக மத்திய படைகளுக்கு பணம் செலுத்துவதற்காக ரூ. 122 கோடியும், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க ரூ. 125 கோடியும் செலவிடப்படுகின்றன. கொரோனா அச்சத்தால், வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்தல் செலவினங்கள் அதிகரித்துள்ளது குறித்த அறிக்கை பீகார் தேர்தல் முடிந்த பின்னர் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அடுத்த ஆண்டு மேற்குவங்கம், தமிழகம் போன்ற மாநிலங்களில் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு 2022ல் உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறும்.

பொதுத் தேர்தல் 2024ல் நடைபெறும் என்றாலும், அதுவரை சமூக இடைவெளி பராமரிக்க வேண்டி இருக்கும். அதனால், தேர்தல் செலவினங்கள் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகிறது. பீகார் தேர்தலை பொறுத்தமட்டில், இந்த முறை இரு மடங்கிற்கும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும். கடந்த 2015ல் நடந்த தேர்தலின்போது சுமார் ரூ.270 கோடி அளவிற்கு செலவான நிலையில், இந்த முறை இந்த செலவு ரூ.600 ேகாடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

அதே சமயம் அரசியல் கட்சிகள், வேட்பாளர்களால் ஏற்படும் தேர்தல் செலவுகள் இந்த கணக்கில் வராது. தேர்தல் செலவினங்கள் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, புதியதாக தேர்தல் வரவு செலவுத் திட்டத்தை தயாரித்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக மத்திய அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.