பொருளாதார வீழ்ச்சி அடைந்து கொண்டே போகும் இந்தியா!

பொருளாதார வீழ்ச்சி அடைந்து கொண்டே போகும் இந்தியா!

ஊரடங்கு மூலம் சில நாடுகள் இரண்டரை மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டன. ஆனால், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளால் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறன என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். அதே சமயம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் மைனஸ் 6 முதல் 9 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என பாஜ.க மூத்த தலைவரும் எம்.பி.,யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

‘மிச்சிகன் பான் ஐ.ஐ.டி., யு.எஸ்.ஏ.,’ சார்பில், ‘கொரோனாவுக்குப்பின் உலகப் பொருளாதார விதிகள்’ எனும் தலைப்பில் மாநாடு நடந்தது. அதில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பேசியதாவது:ஊரடங்கு மூலம் சில நாடுகள் இரண்டரை மாதங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. ஆனால், அமெரிக்கா, இந்தியா, பிரேசில், மெக்சிகோ போன்ற நாடுகளால் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகிறன. வர்த்தகத்திலும் உறுதியில்லாத சூழலை கொரோனா வைரஸ் உருவாக்கியிருக்கிறது. மீண்டும் ஊரடங்கு வருமா, ஊரடங்கு இன்னும் எத்தனை நாட்களுக்கு இருக்கும் போன்ற கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஊரடங்கை மனதில் வைத்து, 50 சதவீதம் மக்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழலுக்கு தங்களை மாற்றிக்கொண்டார்கள். ஆனால், வளரும் நாடுகளான இந்தியா, பிரேசில் போன்றவற்றில் ஏழைகள் அதிகமாக இருக்கிறார்கள்.

வீட்டிலிருந்து பணிபுரியும் தொழிலாளர்கள் மிகக்குறைவுதான். ஆகவே, வளர்ந்துவரும் நாடுகளில் செயல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு விதிகள் பொருளாதாரத்துக்கும், மக்களின் வாழ்வாதாரத்துக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்டது. இந்த நேரத்தில் அமெரிக்கா – சீனா இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இரு வல்லரசுநாடுகளின் மோதல், சர்வதேச வர்த்தகத்தில் நிலையற்ற சூழலை உண்டாக்கும். இந்த காலச்சூழல் என்பது பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல இந்தியா, பிரேசில், மெக்சிக்கோ போன்ற வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளுக்கு முக்கியமான காலகட்டம். கொரோனா வைரசால் பொருளாதாரம் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தேவையை அதிகப்படுத்தி பொருட்கள் உற்பத்தியைப் பெருக்கி, மீண்டெழ இந்தசூழலை நன்கு பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

அதே போல் காணொளிக் காட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மற்றோரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பா.ஜ.க மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியும். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 6 முதல் மைனஸ் 9 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறேன்.

நம்மிடம் உற்பத்தி செய்வதற்கான அனைத்து வளங்களும், திறனும் இருக்கிறது. உற்பத்தி செய்வதிலும், விற்பதிலும் தான் பிரச்னையாக உள்ளது. தேவையான அளவு தொழிலாளர்கள் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவை அனைத்தும் நடந்தால் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.

சரியான பொருளாதாரக் கொள்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாகப் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றக்கூடாது. பொருளதாாரம் கடந்த 5 ஆண்டுகளாகவே சீர்குலைவை நோக்கிச் செல்கிறது என எச்சரித்து பிரதமர் மோடிக்கு பல தருணங்களில் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!