October 16, 2021

போர்களத்தில் உயிரிழப்பைத் தடுக்கும் மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

உலகளவில் மனித உயிரிழப்புகள் பல விதங்கள் பல கோணங்களில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதே போல் மற்றொரு பக்கம் அதை எவ்வாறு தடுப்பது என்பது போன்ற சிந்தனை களும் அறிவியல் நுட்பங்களும் கையாளப்பட்டு வருகின்றன. இதனிடையே போர்க்களம் அல்லது பயங்கரவாத தாக்குதலில் காயமடையும் இராணுவ வீரர்களின் உயிரிழப்பை தடுக்கும் புதிய மருந்துகளை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை (Defence Research and Development Organisation) சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

போர்க்களத்தில் பணியாற்றும் போது பலத்த காயமடையும் வீரர்களில் 90 சதவீதம் பேர் காயமடைந்த சில மணி நேரங்களுக்கு பின் மருத்துவமனையில் உயிரிழக்கிறார்கள்.

அவர்கள் உயிரிழக்க முக்கிய காரணங்களாக இருப்பவை வலி, அதிக ரத்தப்போக்கு, காயங்கள் சீழ்பிடித்தல் மற்றும் அதிர்ச்சி ஆகியவையாகும்.

மேலும் வீரர்கள் பலர் காடுகள், உயரமான மலைப்பகுதிகள், பாலைவனம் போன்ற இடங்களில் காயமடையும் போது அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ இருக்காது. அவர்களை உரிய நேரத்திற்கு மருத்துவமனை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

இந்த பிரச்சனையைத் தீர்க்க காயமடைந்த வீரர்களுக்கு உடனடியாக முதலுதவி மூலம் ரத்தப்போக்கை நிறுத்தி காயங்களை மூடுவதற்கான பிரத்யேக மருந்துகளை அளித்தால் அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலில் காயமடைந்த வீரர்களுக்கு இத்தகைய முதலுதவிகள் அளிக்கப்பட்டிருந்தால் பலியான வீரர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

அதை தொடர்ந்து டி.ஆர்.டி.ஓவுக்கு சொந்தமான இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்கிளியர் மெடிசின் & அலைட் சயின்ஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) சோதனை கூடத்தில் வீரர்களின் உயிர்காக்கும் மருந்துகள் சிலவற்றை விஞ்ஞானிகள் உருவாக்கினர்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மருந்துகளின் தொகுப்பில் ரத்த போக்கை தடுக்கும் மருந்துகள், ரத்தத்தை உறிஞ்சும் தன்மை கொண்ட காயத்திற்கு கட்டு போடும் கட்டுதுணி, கிளசரேட்டட் சலைன் (Glycerated saline) எனப்படும் கிளசரின் கலந்த சலைன் திரவம் ஆகியவை அடக்கம்.

இந்த புதிய போர்கள மருந்துகள் (Combat drugs), காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் வரை அவர்களின் உடல் நிலை மோசமடையாமல் பாதுகாக்கும்.

கிளசரின் கலந்த சலைன் திரவம் மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் குளிரிலும் உறையாமல் இருக்கும். அதனால் மலைப்பகுதியில் காயமடையும் வீரர்களுக்கு இந்த சலைனை ரத்தத்தில் ஏற்ற முடியும். அதன் மூலம் வீரர்களின் உடல்நிலை மோசமடையாமல் பாதுகாக்கப்படும்.

மேலும் இந்த கிளசரேட்டட் சலைன் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். வீரர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கான நேரத்தை இந்த கிளசரேட்டட் சலைன் அளிக்கும் என்று ஐ.என்.எம்.ஏ.எஸ் மூத்த விஞ்ஞானியான மஞ்சு பாலா போப்லி தெரிவித்தார்.

இந்த மருந்துகள் ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினருக்கு பெரிதும் உதவும். போர்க்களத்தில் நம் வீரர்கள் அதிக ரத்தப்போக்கால் உயிரிழப்பதை தடுக்க இந்த போர்கள மருந்துகள் உதவும் என்று டி.ஆர்.டி.ஓவின் வாழ்க்கை அறிவியல் துறையின் டைரக்டர் ஜெனரல் ஏ.கே சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.