September 27, 2021

‘ ஏழை–பணக்காரர் ஏற்றத்தாழ்வு: விரிவடையும் இடைவெளி – இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2018’!

சர்வதேச அளவிலானப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டால் அதில் ஒரு இந்தியர் கட்டாயம் இருப்பார். எக்கச்சக்கமான ஊதியம் வாங்கும் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டால் அதில் கட்டாயம் ஒரு இந்திய நடிகர் இருப்பார். ஆனால், இதே இந்திய நாட்டில்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. செல்வந்தர்கள் மேலும் மேலும் செல்வந்தர்களாகிக் கொண்டே இருக்க, ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுகளை வைத்துக்கொண்டு, வெறும் உள்கட்டமைப்பு (infrastructure) வளர்ச்சியை முன்னிறுத்தினால் அது நாட்டினுடைய வளர்ச்சி அல்ல என்று பல்வேறு இண்டர்நேஷனல் அமைப்புகள் உரிய ஆய்வறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை செய்துதான் வருகிறார்கள். ஆனால் சட்டை செய்யதான் ஆளில்லை. தர்போது கூட இந்தியாவில் 56 சதவிகிதம் செல்வ வளத்தை பணக்காரர்களே கையில் வைத்துள்ளனர் என்று ஜோகன்ஸ்பெர்க் நகரைச் சேர்ந்த ‘நியூஸ் வேல்டு வெல்த்’ என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘ஆக்ஸ்பேம்’ எனப்படும் சர்வதேச தொண்டு நிறுவனம் இந்தியாவின் ஏழை–பணக்காரர் ஏற்றத்தாழ்வு நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. கடந்த 1980–ம் ஆண்டு முதல் 2017 வரையிலான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

‘விரிவடையும் இடைவெளி: இந்திய சமத்துவமின்மை அறிக்கை 2018’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டு உள்ள அந்த அறிக்கையில், உலக அளவில் மிகப்பெரிய சமத்துவமின்மை நிலவும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15 சதவீதத்துக்கு சமமான சொத்தை நாட்டில் உள்ள கோடீசுவரர்கள் வைத்து இருப்பதாகவும், இது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 10 சதவீதமாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேநேரம் இந்திய ஏழைகளோ, தங்களிடம் இருப்பதையும் இழந்து பரம ஏழைகளாக மாறி வருவதாகவும் அறிக்கை கூறுகிறது.கடந்த 1991–ம் ஆண்டு இந்தியா கைக்கொண்ட தாராளமயமாக்கல் கொள்கையும், கடந்த 30 ஆண்டுகளாக நாட்டில் அடுத்தடுத்த அமைந்த அரசுகளின் ஒருதலைப்பட்சமான கொள்கைகளுமே இதற்கு காரணம் என ஆக்ஸ்பேம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிஷா அக்ரவால் கூறியுள்ளார்.