தியாகராய நகரிலுள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடைக்குச் சீல்!
சென்னை தியாகராய நகரிலுள்ள ப்ரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி ஜப்தி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராய நகரில் இயங்கி வந்த பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் இந்தியன் வங்கிக்கு ரூபாய் 120 கோடி கடன் செலுத்த வேண்டி இருந்ததாக தெரிகிறது. இதை செலுத்தாத காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையை இந்தியன் வங்கி இன்று காலை ஜப்தி செய்தது. சென்னை தியாகராய நகரில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோர்ஸுக்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ப்ரைம் சரவணா மற்றும் தங்கமாளிகை இந்தியன் வங்கியிடம் இருந்து ரூ. 240 கோடி கடன் பெற்றுள்ளது. உரிய நேரத்தில் கிட்டத்தட்ட ரூ.120 கோடி வங்கி கடனை செலுத்த தவறியதால் இந்தியன் வங்கி எழும்பூர் நீதிமன்றத்தில் இதுகுறித்து மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம் சரவணா ஸ்டோர்ஸில் சீல் வைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று காலை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
எழும்பூர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அட்வகேட் கமிஷனர் முன்னிலையில் பிரைம் சரவணா ஸ்டோர்ஸில் வைக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. சென்னை ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள நகை கடை கட்டடமும் ஜப்தி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின் பெயரில் கடையை ஜப்தி செய்ததாக இந்தியன் வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜப்தி நடவடிக்கையையொட்டி அங்கு பெருமளவிற்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஜப்தி நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.