May 10, 2021

பயங்கரவாதிகள் முகாமில் இந்திய ராணுமம் மீது நடத்திய தாக்குதல் குறித்த வீடியோ மீதும் சர்ச்சை!

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ச்சூழல் மூண்டுள்ள நிலையில், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து மத்திய அரசு வட்டாரங்களிடம் விசாரித்த போது, “இந்தக் கூட்டத்தில் சர்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி, நதிகளுக்கு அப்பால் உள்ள தொலைதூர பகுதி ஆகியவற்றில் நிலவிவரும் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தான் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, அதிகாரப்பூர்வமான நபர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் மற்ற அமைச்சர்கள் அதுகுறித்து பேசுவதைத் தவிர்த்துவிடுமாறும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார் என்று தெரிவித்தன.

army oct 6

இந்நிலையில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அரசிடம் விடியோ ஆதாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, டெல்லியில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர், “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சரோ, பாதுகாப்புத் துறை அமைச்சரோ அல்லது பிரதமரோ விளக்கம் அளிக்கவில்லை. அது தொடர்பாக, ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்தான், ஊடகங்களுக்கு விளக்கம் அளித்தார். பயங்கரவாத முகாம்கள் மீதான தாக்குதல் தொடர்பான விடியோ பதிவுகள், மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளன” என்றார் அவர்.

இதனிடையே, பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களாகக் காட்டுவதற்காக, இந்திய ராணுவம் போலியாக வேறிடத்தில் தாக்குதல் நடத்தி விடியோ தயாரித்ததாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத், புதன்கிழமை கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களாகக் காட்டுவதற்காக, குப்வாரா மாவட்டத்தில் எனது தொகுதிக்குள்பட்ட லீபா பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம், கடந்த 3 நாள்களாக போலியான தாக்குதல் நடத்தி, அவற்றை விடியோவில் பதிவு செய்து வருகிறது. இந்திய ராணுவம், ஆதாரமாக எதையாவது காட்டினால், அது லீபா பள்ளத்தாக்குதான் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதை என்னால் நிரூபிக்க முடியும். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாகக் கூறும் 5 இடங்களில் 2 இடங்கள் எனது தொகுதியில் அமைந்துள்ளன. அந்த இடங்களில் கடந்த 20 நாள்களில் எந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெறவில்லை என்று பகுதிவாசிகள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 2 மாதங்களாக நீடித்து வரும் வன்முறை, காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப நடத்தப்பட்ட நாடகமே, அதிரடித் தாக்குதல் சம்பவம்.பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்பதை நிரூபிப்பதற்காக சர்வதேச ஊடங்களை பாகிஸ்தான் அரசு அழைத்துள்ளது. அதேபோல், மத்திய அரசு கூறுவது உண்மையெனில் சர்வதேச ஊடகங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இந்திய ராணுவம், நம்பகத்தன்மையோடு இருக்க வேண்டுமெனில் அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக் கூடாது என்றார் அவர்.

இந்நிலையில், மத்திய அரசிடம் இந்திய ராணுவம் அளித்துள்ளதாகக் கூறப்படும் விடியோ ஆதாரத்தை பாதுகாப்பு அம்சங்களுக்கு எதிரான காட்சிகள், வன்முறைக் காட்சிகள் ஆகியவற்றை நீக்கிவிட்டு வெளியிடலாம் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கூறினார். “

“ஆனால், அவ்வாறு செய்வது, அறிவுக்கு ஒவ்வாத செயல்; விடியோ ஆதாரத்தை வெளியிடுவது குறித்து ராணுவமே முடிவு செய்ய வேண்டும்” என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி வி.பி.மாலிக் கூறினார்.

இதனிடையே, ராணுவம் அளித்த விடியோ ஆதாரத்தை வெளியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியே முடிவு செய்வார் என்று மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் கூறினார்.