இந்திய ராணுவத்தில் பெண் சிப்பாய்கள் சேர்க்கை ஆரம்பம்!

பெருமைமிகு நம் இந்திய ராணுவம் சார்பில், பெண் சிப்பாய்களை ராணுவ காவல்துறையில் பணியமர்த்துவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியமுள்ள பெண்கள் www.joinindianarmy.nic.in என்ற ராணுவ இணையதளத்தின் மூலம் வருகிற ஜூன் மாதம் 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்திய ராணுவ தலைமை தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்ற போது, ராணுவத்தின் அனைத்து முக்கிய பணிகளிலும் பெண்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவர் எனக் கூறியிருந்தார். அந்த வகையில், ராணுவத்தில் ஒருபிரிவாக உள்ள ராணுவ காவல்துறையில் பெண் சிப்பாய்களை பணியமர்த்த வகை செய்யும் பரிந்துரைக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து அந்த வகையில், தற்போது இந்திய ராணுவத்தில் பெண் சிப்பாய் படைகளை உருவாக்க இந்திய ராணுவம் முன்வந்துள்ளது. இந்த பொறுப்பில் இதுவரை ஆண்கள் மட்டுமே பணிபுரிந்துவந்த சூழலில், தற்போது இளம்பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

நம் இந்திய ராணுவத்தில், சிக்னல்ஸ், ஆர்மி ஏவியேஷன், ஆர்மி ஏர் டிஃபன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினீயர்ஸ், ஆர்மி சர்வீஸ், ஆர்மி ஆர்டினன்ஸ், டிஃபன்ஸ் அட்டாஷே உள்ளிட்ட பல பிரிவுகளில் பெண்கள் பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் ஃபைட்டர் பைலட் பணிக்கும் பெண் அதிகாரிகள் வாய்ப்பு பெற்றனர். இதன் மூலம் IAF-ன் அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களும் பணியாற்றக் கூடிய பெருமை கிட்டியது. இந்நிலையில் தற்போது இந்திய ராணுவத்தில் சிப்பாய் பிரிவில் பெண்களுக்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 100 பெண் சிப்பாய்கள் தற்போது தேர்ந் தெடுக்கப் படவுள்ளனர் எனவும், இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளம்பெண்கள் ஏப்ரல் 25 துவங்கி ஜூன் 8 வரையில் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பிக விரும்பும் பெண்மணிகள் 17½ முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம்.

அம்பாலா, லக்னோ, ஜபல்பூர், பெங்களூரு மற்றும் சில்லாங் ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு நிகழும் என்பதால் விண்ணப்பதாரர் தங்களுக்கு அருகில் உள்ள தேர்வு மையத்தை தேர்வு செய்து கொள்ளலாம். தேர்விற்கான அனுமதி சீட்டு அவரவர் அதிகாரப்பூர்வ மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொது வினா தாள் அடிப்படையில் தேர்வாளர்களுக்கு தேர்வு நடத்தப்படும். பொது தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

மருத்துவ பரிசோதனையின் போது பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர், நிரந்திர டாட்டோ வரைந்திருப்பவர்கள் விதிகளின் பேரில் தேர்ந்தெடுக்கப்படுவர், கர்ப்பிணி பெண்கள் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.