April 17, 2021

அமெரிக்க நிர்வாகம் இந்திய வம்சாவளியினர் கைக்கு போகிறது- அதிபர் ஜோ பிடன் பேச்சு!

திபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசில் பல முக்கிய பதவிகளில் 55 இந்திய வாழ் அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை குறிப்பிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நம் நாட்டு நிர்வாகத்தை கைப்பற்றி வருகிறார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய்கிரகத்துக்கு அனுப்பிய பெர்செவரன்ஸ் விண்களம் கடந்த மாதம் செவ்வாய்கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த விண் கலத்தை அனுப்பிய நாசாஅ விஞ்ஞானிகள் குழுவில் இந்திய அமெரிக்கரான சுவாதி மோகன் முக்கிய பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெர்சர்வரன்ஸ் விண்கலத்தின் வெற்றியை பாராட்டும் வகையில் நேற்று நாசா விஞ்ஞானிகளிடம் ஆன்லைன் மூலம் ஜோ பிடன் கலந்துரையாடினார். அப்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் நம் நாட்டு நிர்வாகத்தை கைப்பற்றுகிறார்கள். நீங்கள் (சுவாதி மோகன்), எனது துணைத் தலைவர் (கமலா ஹாரிஸ்), எனது பேச்சு எழுத்தாளர் (வினய் ரெட்டி),” என்று ஜோ பிடன் தெரிவித்தார்.

கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்ற ஜோ பிடன், முதல் 50 நாட்களிலேயே தனது நிர்வாகத்தில் முக்கிய பதவிகளுக்கு குறைந்தது 55 இந்திய-அமெரிக்கர் களை நியமித்து புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளார். நியமிக்கப்பட்ட இந்திய அமெரிக்கர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும் அவர்களில் கணிசமானவர்கள் வெள்ளை மாளிகையில் பணிபுரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.