September 20, 2021

கேன்சர் குறித்து ஆய்வு செய்ய இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 1.1 மில்லியன் டாலர் நிதி!

சர்வதேச அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம். புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
மது அருந்தும் பழக்கம்
அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை

மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

இதனிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவீன் வரதராஜன் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அவரது ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் டெக்சாஸ் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது.

நவீன் புற்றுநோயாளிகளுக்கு டி-செல் நோய் எதிர்ப்பு சிகிச்சையை மேம்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். இந்த சிகிச்சையில், உடலில் உள்ள டி-செல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோய் கட்டிகளில் உள்ள செல்களை செயலிக்க வைக்கின்றன. தனக்கு கிடைத்த தொகை மூலம் நோயாளிகளுக்கு புற்றுநோயை குணப்படுத்த உதவுவேன் என அவர் தெரிவித்தார்.

நவீனுடன் இணைந்து ஆராய்ச்சி செய்து வரும் மற்றொரு ஆராய்ச்சியாளர் சங்யுக் ஜங்கிற்கும் 8 லட்சம் டாலர் வழங்கியுள்ளனர். இவர் கர்ப்பப்பை புற்றுநோய் சிகிச்சை குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.