March 25, 2023

யூ-டியூப் புதிய சிஇஓ-வானார் நீல் மோகன்! யார் இவர் தெரியுமா?

ப்போது பலரின் வாழ்வாதாரத்துக்கு வழிக்காட்டி இருக்கும் யூடியூப் தளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அமெரிக்க வாழ் இந்தியரான நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். யூடியூப்-ன் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுவதாக சூசன் வோஜ்சிகி அறிவித்தைத் தொடர்ந்து, நீல் மோகன் அந்த இடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.கூகுள் நிறுவனத்தின் சிஏஓவாக சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக சத்யா நாடெல்லா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் இன்னொரு இந்திய வம்சாவளியினரான நீல் மோகன் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவிக்கு தேர்வாகி உள்ளது இந்திய இளைஞர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலீஷா? அப்படின்னா என்ன?’ என்று அப்பாவித்தனமாய் ஆனால் நிஜமாகக் கேட்ட ஜி.பி.முத்து, சாதாரணமாக பைக் ஓட்டிக் கொண்டிருந்த டி.டி.எஃப், படித்தும் ‘ஒரு வேலைக்கு கூட தகுதியில்லை’ என்று கூறி தூக்கி எறியப்பட்டவர், ‘நடிப்பென்றால் என்ன என்று தெரியுமா?’ என்று கேட்டு புறக்கணிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரை, செலிபிரிட்டி லெவலுக்கு உயரத்திக் காட்டிய மாய தளம் யூடியூப்! ஒரு கட்டுரை எழுத சில விஷயங்களை தேட கூகுள் இருக்கிறது. ஆனால் சட்டென்று தோணும் விஷயங்களை வீடியோவாக தேட தனியாக ஒன்றும் இல்லாமல் இருந்தது! அந்த குறையைப் போக்க உருவாக்கப்பட்டது தான் YouTube என்ற காட்சி மொழி வலைதளம். ஏதோ ஒரு உத்வேகத்தில் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோரால் தொடங்கப்பட்ட யூடியூப்பை, 2006ல் கூகுள் நிறுவனம் தன்வசமாக்கியது. அதன்பின், அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்து இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து விட்டது. குறிப்பாக, கடந்த பத்து ஆண்டுகளில் அதன் வளர்ச்சி அசுரத்தனமானது.

அந்த யூடியூபின் புதிய CEO நீல் மோகன் அவரது மனைவி ஹேமா சரிமுடன் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார். இவர் இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தின் லக்னோவில் பிறந்தவராவார். நீல் மோகன் அவரது தொழில் வாழ்க்கையை Glorified Technical Support என்ற கம்பெனி மூலம் தொடங்கினார். அப்போது அவரது ஆண்டு வருமானம் 60,000 டாலராகும். அதன் பிறகு, 2008ம் ஆண்டு கூகுளால் வாங்கப்பட்ட Double Clickல் சேர்ந்தார். அன்றிலிருந்து நீல் மோகன் கூகுள் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிவிட்டார்.

1996ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலெக்டரிக் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 2005ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஸ்கூல் ஆப் பிசினசில் அவரது எம்பிஏ படிப்பை முடித்தார். 2015ம் ஆண்டு யூடியூப்பில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். யூடியூப்பில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக குறும்படங்கள், இசை ஆகியவைகளில் அதிக கவனம் செலுத்தினார்.

இதனிடையே நீல் மோகனுக்கு ட்விட்டரில் இருந்தும் வேலைவாய்ப்பு கிடைத்ததை அறிந்து கூகுள் நிறுவனம் அவருக்கு போனஸ் அறிவித்தது. யூடியூப் தவிர, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன் நிறுவனமான ஸ்டிட்ச் ஃபிக்ஸ் நிறுவனத்தின் போர்டு இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார் நீல்மோகன். இவர் 23&Me என்ற பயோடெக்னாலஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலும் இடம் பெற்றுள்ளார்.

நீல் மோகன் யூடியூப்பின் புதிய சிஇஓ ஆனது குறித்து தன் சோசியல் மீடியா பேஜில் , ‘நன்றி சூசன் வோஜ்சிக்கி, பல ஆண்டுகளாக உங்களுடன் பணியாற்றியது மிகவும் அருமையாக இருந்தது. பார்வையாளர்களுக்கும் யூடியூப்பை ஒரு அசாதாரண தளமாக மாற்றியுள்ளீர்கள். இந்த முக்கியமான பணியைத் தொடர நான் உற்சாகமாக இருக்கிறேன்‘ என்று தெரிவித்துள்ளார்