October 16, 2021

சர்வதேச போட்டியில் முதல்முறையாக களமிறங்கப் போகுது இந்திய ரக்பி மகளிரணி!

ரக்பி. கால்பந்து விளையாட்டில் இருந்து உருவானது இது. இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலை நாட்டு விளையாட்டான ரக்பி, இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் வெகு விமர்சையாக விளையாடப்படுகிறது. இந்தியா வில் குறிப்பாக தமிழகத்தில் இவ்விளையாட்டு பற்றிய போதிய தெளிவு இல்லாததால், இவ்விளையாட்டில் வீரர் களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. ஆனால் தற்போது ஆண்-பெண் அனைவரும் கலந்துகொண்டு தேசிய அளவில் விளையாடி வெற்றி பெற்று தமிழகத்திற்கு பெறுமை சேர்த்துள்ளார்கள். தற்போது இந்தியன் ரக்பி கால்பந்து சங்கம் ஒவ்வொரு மாநிலத்திலும் ரக்பி கால்பந்து டெவலப்மென்ட் அதிகாரிகளை நியமித்து அகில இந்திய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது.

இதனிடையே சர்வதேச ரக்பி சாம்பியன்ஷிப் போட்டியில் ‘ஆசியா டிவிஷன் 1’ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், இணைந்துள்ள இந்திய மகளிரணி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண உள்ளது. ரக்பி விளையாட்டில் இந்திய மகளிரணி ஏற்கெனவே ‘7 வீராங்கனைகள்’ முறையில் கலந்துகொண்டது. இந்த நிலையில், தற்போது ரக்பி விளையாட்டின் பாரம்பரியமான ’15 வீராங்கனைகள்’ முறையில் கலந்து கொள்கிறது.

இந்த ஆசிய டிவிஷனில் இந்தியாவுடன், பிலிப்பின்ஸ், சிங்கப்பூர் அணிகளும் பங்கேற்கின்றன. 15 வீராங்கனைகளுடன் விளையாடும் சர்வதேச ரக்பி போட்டியில் இந்த அணிகளுமே முதல் முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மூன்று நாடுகள் பங்கேற்கும் போட்டிகள் வரும் ஜூன் 2 முதல் 8 வரையில் சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக இந்திய ரக்பி பயிற்சியாளர் நாசர் ஹுசைன் தெரிவித்தார். இந்த மூன்று நாடுகளையும் சேர்த்து ஆசியாவில் பாரம்பரிய ரக்பி போட்டியை விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

இந்திய அணிக்கு மகாராஷ்டிரத்தின் வாபிஸ் பாருசா கேப்டனாக உள்ளார். அணியில் ஒடிஸாவிலிருந்து 9 வீராங்கனைகள், டெல்லியிலிருந்து 7 வீராங்கனைகள், மேற்கு வங்கத்திலிருந்து 5 வீராங்கனைகள், மகாராஷ்டிரத்திலிருந்து 3 வீராங்கனைகள், கோவா, பிகாரிலிருந்து தலா ஒரு வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.