இந்திய மகளிர் அணியின் தொடரும் வெற்றி!

இந்திய மகளிர் அணியின் தொடரும் வெற்றி!

ங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-–0 என முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 143 ரன் அடித்து சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து – இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் ஆட்டம் கேண்டர்பரியில் நடைபெற்றது. டி20 தொடரில் இங்கிலாந்திடம் தோற்ற இந்திய மகளிர் அணி, ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் ஆட்டத்தை எளிதாக வென்றது. 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 18 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். மந்தனா 40 ரன்களும் ஹர்லீன் தியோல் 58 ரன்களும் எடுத்து உறுதுணையாக இருந்தார்கள்.

இங்கிலாந்து மகளிர் அணி, 44.2 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேனி வியாட் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 88 ரன்கள் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தை வென்ற இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தில் 1999-க்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. 1999-க்குப் பிறகு இங்கிலாந்தில் விளையாடிய 6 ஒருநாள் தொடர்களிலும் இந்திய மகளிர் அணி தோற்றது. ஒருநாள் தொடரில் 2–-0 என இந்திய மகளிர் அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமையன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக இந்த போட்டியில் 4-வதாக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 111 பந்துகளில் 18 ஃபோர், 4சிக்ஸ் என மொத்தம் 143 ரன்கள் எடுத்து அசத்தினார். இது இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது. 143 ரன்கள் எடுத்ததன் விளைவாக, 3,000 ரன்களை விரைவாக எட்டிய முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

இதற்கு முன்பாக மிதாலி ராஜ் இந்த சாதனையை பெற்றிருந்தார். அதாவது 88 போட்டிகளில் விளையாடி 3,000 ரன்களை கடந்திருந்தார் மிதாலி ராஜ். ஆனால் மிதாலி ராஜின் சாதனையை அவரிடம் இருந்து தட்டிப் பறித்திருக்கிறார் ஹர்மன் ப்ரீத். மிதாலி ராஜ் 88 போட்டிகளில் எடுத்த 3,000 ரன்களை, ஹர்மன் ப்ரீத் 76 போட்டிகளிலேயே அடைந்து புதிய வரலாறு படைத்திருக்கிறார். அத்துடன், இந்திய அளவில் விரைவாக 3 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது நபர் என்ற பெருமையும் ஹர்மன் ப்ரீத் பெற்றுள்ளார். அவருக்கு முன்பாக ஷிகர் தவான் 72 போட்டிகளிலும், விராட் கோலி 75 போட்டிகளிலும் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

error: Content is protected !!