October 2, 2022

போலிச் செய்தி கொடுக்கும் பத்திரிகையாளர் அங்கீகாரம் ரத்து என்ற அறிவிப்பு வாபஸ்!

கடந்த 11 ஆண்டுகளில் புரளிகள் மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட 1,26,000 செய்தி கட்டுரைகளை ஆய்வு செய்ததன் மூலம் உண்மையான செய்திகளைவிட போலிச் செய்தி கள் வெகுவிரைவாக மக்களை சென்றடைவது தெரியவந்து இருந்தது. அமெரிக்காவின் மாசசூட்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சியில், போலிச் செய்திகளை பாட்டுக்கள் (bots) எனப்படும் மென் பொருள்களைவிட மனிதர்களே அதிக எண்ணிக்கையில் ரீ-ட்வீட் செய்தது தெரிய வந்தது. போலிச் செய்திகள் படிப்பதற்கு ஒருவித நூதனமான உணர்வை அளிப்பதால் அவை படிப்பதற்கும், பகிர்வதற்கும் தூண்டுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த டைப்-பிலான போலி செய்திகள் அண்மைகாலமாக இந்தியாவிலும் அதிகரித்துள்ள நிலையில் போலி செய்தியை பகிரும் சம்பந்தப்பட்ட செய்தியாளரின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவெடுத்திருப்ப தாகவும் இது தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகம் என அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.அதாவது பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வரும் போலி செய்திகளை கட்டுப்படுத்த, “பத்திரிகையாளர் களின் அங்கீகாரத்திற்கான வழிகாட்டுதல்களில்” (Guidelines for Accreditation of Journalists) மாற்றங்கள் கொண்டு வந்தது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.

அதன்படி

1) பத்திரிக்கைகளில் வரும் போலி செய்திகள் சம்பந்தப்பட்ட புகார்களை இந்திய பிரஸ் கவுசில் (Press Council of India – PCI) விசாரிக்கும்.

2) தொலைக்காட்சிகளில் வரும் போலி செய்திகள் சம்பந்தப்பட்ட புகார்களை செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் (News Broadcasters Association – NBA) விசாரிக்கும்.

3) இந்த புகார்கள் 15 நாட்களுக்குள் இந்த அரசு சாரா PCI, NBA அமைப்புகளால் விசாரித்து முடிக்கப்படும். இதில் அரசின் தலையீடு கிடையாது.

4) போலி என்று ஊர்ஜிதமானால், அந்த செய்தியை வெளியிட்ட அல்லது பரப்பிய அங்கீகாரம் பெற்ற நிருபரின் அங்கீகாரம் இடைநீக்கம் (suspend) செய்யப்படும். முதல் தவறுக்கு 6 மாத இடைநீக்கம், இரண்டாம் முறை – ஒரு வருட இடைநீக்கம், மூன்றாம் முறை – நிரந்தர நீக்கம்!

அரசின் இந்த வழிகாட்டுதல் உத்தரவு நேற்று இரவு வெளியானது. இது குறித்து  தகவல் தெரிவித்திருந்த மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, விரைவில் விதிகளை வகுக்க உள்ளதாகவும் இதற்காக எதிர்வரும் காலத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு என ஒரு தனி ஆணையம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த அறிவிப்பு இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சையாக உருவெடுத்தது,  பொய் செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், ஆனால், அதற்கான விதிமுறை ஏதுமில்லாத சூழலில் இதே புகாரைக் கூறி நடுநிலையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமைந்து விடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் எச்சரித்திருந்தார். இதுபோலவே மத்திய அரசின் இந்த முயற்சி, ஊடகங்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையாக அமைந்து விடும் என பத்திரிகையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பிரதமர் மோடியின் வழிக்காட்டுதலின் படி, பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது, இந்த விவகாரத்தை பிரஸ் கவுன்சில் மட்டுமே பேச வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஸ்மிருதி இரானி போட்டிருந்த ட்விட்டர் கமெண்டில் நேற்றைய அறிவிப்பு பி.ஐ.பி, பிரஸ் கவுன்சில் மற்றும் ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றில் ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது, இதற்குப் பல பத்திரிகையாளர்களும் பத்திரிகை நிறுவனங்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்துகளை கேட்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் போலிச் செய்திகளுக்கு எதிராகப் போராட முடியும், மேலும், ஆர்வம் கொண்ட பத்திரிகையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எனப் பதிவிட்டுள்ளார்.