இந்தியா – பாக் எல்லை வர்த்தகம் ரத்து!

இந்தியா – பாகிஸ்தான் இடையில்  2005-2006 காலகட்டங்களில் போடப்பட்ட வர்த்தக ஒப்பந்தப்படி  இரண்டு நாடுகளுக்கு இடையில் குறிப்பிட்ட சில பொருட்களை மட்டும் வரி விலக்குடன் ஏற்றுமதி செய்துக்கொள்ள முடியும். அதே சமயம் இந்த எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து போதை மருந்து, சட்டவிரோத ஆயுதங்கள், கள்ள நோட்டு ஆகியவை இந்தியாவுக்கு கடத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை அடுத்துது இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகத்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தடை வெள்ளிக்கிழமை முதல் அமலாகிறது.

ஜம்மு காஷ்மீர் யூரி மாவட்டத்தில் உள்ள சாலாமாபாத் மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சக்கன் – டா- பாக் ஆகிய இரு இடங்களில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகம் நடைபெற்று வருகிறது. வாரத்துக்கு 4 நாட்கள் வரியில்லா பண்டமாற்று முறையில் இந்த வணிகம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பின் மத்திய அரசு பாகிஸ்தான் தொடர்பான விசாரணை களை தீவிரப்படுத்தியது. அந்த விசாரணையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகம் வழியாக பாகிஸ்தானில் இருந்து போதை மருந்துகள், சட்டவிரோத ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்தியாவுக்குள் கடத்தப்படுவதாக தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை வணிகத்தை தடை செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எல்லை வணிகம் தொடர்பான கடுமையான ஒழுங்குமுறைகளை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான பணி நிறைவடைந்தவுடன் எல்லை வணிகத்தை மீண்டும் துவக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனாலும் இந்த வர்த்தகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் பல முறை நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்து.