August 4, 2021

தாஜ்மஹால் போலாமா?

நம் நாட்டில் இதுவரை 54 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். அதே போல, 87 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. அதனடிப்படையில் தற்போது மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து செயல்படுகிறது.

அதே போல, உள்நாட்டு விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலை மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு காரணமாக தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவந்தாலும், பொதுமக்கள் வெளியே செல்லும்போது மாஸ்க் அணியவேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக பல சுற்றுலாத் தளங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவையும் படிப்படியாக திறக்கப்பட்டுவருகின்றது, அந்தவகையில், 6 மாதங்கள் கழித்து இன்று தாஜ் மஹால் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

* ஆக்ரா கோட்டையும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படும். தினமும் 2,500 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* ஆக்ராவில் உள்ள மற்ற அனைத்து வரலாற்று நினைவுச்சின்னங்களும் ஏற்கனவே செப்டம்பர் 1 முதல் திறக்கப்பட்டுள்ளன.

* ஒரே புகைப்படத்தில் இடம்பெறவேண்டும் என்றாலும் கூட சுற்றுலாப் பயணிகள் 6 அடி தூரத்தில் இருக்கவேண்டும். தனித் தனியாக புகைப்படம் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* பணமில்லா பரிவர்த்தனைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

* உரிமம் பெற்ற வழிகாட்டிகளை மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

* தாஜ்மஹால் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.

* ஆக்ரா கோட்டை ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே மூடப்படும்.