உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதி!
வங்கதேசத்தில் 10வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்து வந்தன. இதில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, வங்கதேசம், ஜப்பான், தென் கொரியா, சீனா, ஓமன் ஆகிய 8 நாடுகளின் அணிகள் பங்கேற்றன.இரு பிரிவுகளாக நடந்த லீக் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா அணிகள் வெற்றி பெற்று, சூப்பர்–4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர்–4 சுற்றில் தென் கொரியாவுடன் இந்திய அணி டிரா செய்தது. பாகிஸ்தான் மற்றும் மலேசியாவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதேபோல், தென் கொரியாவுடன் டிரா செய்து, பாகிஸ்தானை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு மலேசிய அணி தகுதி பெற்றது.

தாகா நகரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், மலேசியாவுடன் இந்திய அணி மோதியது. இந்திய அணிக்காக 3வது நிமிடத்தில் ராமன்தீப் சிங், 29வது நிமிடத்தில் லலித் உபாத்யாய் கோல் அடித்தனர். 50வது நிமிடத்தில் மலேசிய வீரர் ஷாஹ்ரில் கோல் அடித்தார்.ஆட்டநேர இறுதியில், 2–1 என்ற கோல்கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி, இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் லீக் சுற்றிலும், சூப்பர்–4 சுற்றிலும் பாகிஸ்தானை இந்திய அணி இருமுறை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி மூலம் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாட இந்திய அணி தகுதிபெற்றது.