இந்தியாவில் புகையிலை சாகுபடிக்காக ஆண்டுக்கு 1,700 ஹெக்டேர் காடு அழிப்பு!

இந்தியாவில் புகையிலை சாகுபடிக்காக  ஆண்டுக்கு 1,700 ஹெக்டேர் காடு அழிப்பு!
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி டெல்லியில் நேற்று உலக சுகாதார மையம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், “புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. சீனா ஆண்டுக்கு 32 லட்சம் டன் புகையிலையை உற்பத்தி செய்கிறது. 1970களின் மத்தியில் இருந்து புகையிலை சாகுபடிக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இது பல்லுயிர் பெருக்கத்திற்கு அச்சுறுத்தல் ஆகும்.
1970-1980ம் ஆண்டுகளில் 69 நாடுகளில் புகையிலை பயிரிடப்பட்டது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம் புகையிலை பயிரிடப்பட்டது. இந்நாடுகளில் புகையிலை உற்பத்திக்கு தேவையான எரிபொருளுக்காக காடுகள் அதிகம் அழிக்கப்பட்டன. 1990களில் இது அதிகரித்தது. 1990களின் மத்தியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளில் புகையிலை சாகுபடிக்காக 2,11,000 ஹெக்டேர் பரப்பிலான காடுகள் அழிக்கப்பட்டன.
1962ம் ஆண்டில் இருந்து 2002ம் ஆண்டு வரை இந்தியாவில் 68,000 ஹெக்டேர் பரப்பிலான காடு அழிக்கப்பட்டது. ஆண்டுக்கு சராசரியாக 1,700 ஹெக்டேர் காடு அழிக்கப்பட்டது.
புகையிலைக்காக காடுகள் அழிந்து வருவதை ஜோர்டான், கியூபா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் இன்று உணர்ந்து கொண்டன. இந்தியா புகையிலை ஓர் அழிவுப்பயிர் என்று வர்ணித்தது. இந்தப் புகையிலையால் உலகம் முழுக்க ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். புகையிலையால் ஏற்படும் நோய்க்காக ஆண்டுக்கு 1,40,000 கோடி டாலர் செலவிடப்படுகிறது.
எனவே, புகையிலை பயன்பாட்டுக்கு உலக நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புகையிலை கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் 7,000 நச்சு வேதிப்பொருள்கள் தோன்றுகின்றன.உலகம் முழுவதும் தினசரி 1,000 கோடி முதல் 1,500 கோடி சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன. கடற்கரை மற்றும் நகர்ப்புறங்களை தூய்மைப்படுத்தும் போது கிடைக்கும் கழிவுகளில் 40 சதவீதம் சிகரெட் துண்டுகள் தான். இந்தியா போன்ற குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் 86 சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். இந்த நாடுகளில் உணவு, கல்வி, மருத்துவத்துக்கு செலவழிப்பதை விட அதிக தொகையை புகையிலை பொருள்களுக்கு செலவழிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே சமயம்  உலக அளவில் புகையிலைக்கு உற்பத்தி வரி விதிப்பதன் மூலம் அரசுகளுக்கு ஆண்டுக்கு 2,70,000 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது”என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
error: Content is protected !!