என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கம்!
என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத் துவக்கத்தில் இந்தியாவில் கரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரிக்க துவங்கியவுடன், பொதுவாக மருத்துவத் துறையினரால அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்-95 ரக முகக்கவசங்களுக்கான உள்நாட்டுத் தேவை அதிகரித்தது. இதையடுத்து அந்த கவசங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
பின்னர் உற்பத்தி நிலைமை வெகுவாக சீரடைந்தவுடன், தொழில் நிறுவனங்களின் வேண்டு கோளையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, ஒரு மாதத்திற்கு 50 லட்சம் முகக் கவசங்களை மட்டும் ஏற்றுமதி செய்யலாம் என்று தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் என்-95 ரக முகக்கவசங்களுக்கான ஏற்றுமதித் தடையை நீக்கி மத்திய வர்த்தகத் துறை தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அயல்நாட்டு வர்த்தகத்திற்கான தலைமை இயக்குநர் செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘என்-95 / எப்.எப்.பி 2 ரகங்கள் அல்லது அதற்கு இணையான முகக்கவசங்களுக்கான ஏற்றுமதிக் கொள்கையானது, எளிதான வர்த்தகத்திற்கு வழி செய்யும் விதமாக ‘கட்டுப்படுத்தப்பட்டது’ என்ற பிரிவில் இருந்து ‘தாராளம்’ என்ற பிரிவிற்கு மாற்றப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.