June 16, 2021

இந்த கொரோனாவின் 3-வது அலையையும் எதிர்கொண்டுதான் ஆகோணுமாம்!

ம் நாட்டில் இந்த கோவிட் 19 வைரசின் 3-வது அலையை எவராலும் தவிர்க்க முடியாது. அதை எதிர்கொள்ள நாம் எல்லோரும் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே. விஜயராகவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் தொற்றின் 2-வது அலை உச்சத்தில் உள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துகள் ஆகியவற்றிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவில் கோவிட் 19 நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கோவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் இடம்பெற்றுள்ள முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் பேசியது இதுதான் :

இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் பாதிப்பின் 3-வது அலையை தவிர்க்க முடியாது. வைரஸ் அதிக அளவில் பரவும் நிலையிலும் மூன்றாவது அலை எப்போது ஏற்படும் என்று தற்போது கூறமுடியாது. 3-வது அலைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். மாறுபட்ட கோவிட் 19 வைரஸும் உண்மையான கோவிட் 19 வைரஸ் போலவே பரவுகின்றன. மனிதர்கள் மூலமே கோவிட் பரவுகிறது.

தற்போதுள்ள அனைத்து வகை கோவிட் 19 பாதிப்புக்கு எதிராகவும் தடுப்பு மருந்து சிறப்பாக செயல்படுகிறது. புதிய வகை கோவிட் 19 வைரஸை தடுப்பது குறித்தும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு தீவிர ஆராய்ச்சி திட்டம். இது இந்தியா உள்பட உலகநாடுகள் பலவற்றில் நடைபெற்று வருகிறது என விஜய ராகவன் தெரிவித்தார்.

பின்னர் சுகாதாரத்துறை இணை செயலாளர் லவ் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசும் போது, “இந்தியாவில் மகாராஷ்டிரம், உத்தரபிரதேசம், டில்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தினசரி கோவிட் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அதேசமயம் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், பீகார், ஹரியானா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தினசரி கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் மருத்துவ உதவிகளை கண்காணிக்க அமைச்சரவை மட்டத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை குழுக்கள் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன” என்றார்.