September 25, 2021

ஆப்ஸ் டவுண்லோடு பண்றதுலே நம்ம இந்தியா நாலாமிடம் !

இன்றையக் காலக் கட்டத்தில் வெப்சைட்டுகள் மெள்ள மெள்ள மறைந்து, இனி எல்லாமே ஆப்ஸ் மயம் என்று சொல்கிற அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. அதிலும் ஆப்ஸ்கள் வெப்சைட்டுகளை விட ஸ்மார்ட்டாக நமது தேவைகளை சீக்கிரமாகவே பூர்த்தி செய்கின்றன. சினிமா டிக்கெட் வாங்குவதில் தொடங்கி பீட்ஸா ஆர்டர் செய்வதுவரை அனைத்தும் ஆப்ஸ்ஸில் அடக்கம். ஒருநாளில் நடக்கும் தூரம், தெரியாத இடத்துக்குச் செல்லும் வழி, உண்ணும் உணவின் கலோரிகள், படிக்க வேண்டிய செய்திகளின் தொகுப்பு, மளிகைச் சாமான்களை வாங்க என இன்றைக்கு ஆப்ஸ்களின் பயன்பாடு பல வழிகளிலும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

apps india

இந்நிலையில் சர்வதேச அளவில் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வதில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது என்று மொபைல் ஆப்ஸ் ஆய்வு நிறுவனமான அப் அனி ஏ.பி.ஏ.சி. தெரிவித்துள்ளது.

ஆப் அனி ஏ.பி.ஏ.சி நிறுவனத்தின் அறிக்கையில், “ஒரு ஆண்டில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மொத்த ஆப்ஸ் அடிப்படையில் சீனா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முறையே முதல் 3 இடங்களில் உள்ளன. இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. மேலும், ஆப்ஸில் இந்தியர்கள் செலவிடும் நேரமும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டில் ஆப்ஸ் பதிவிறக்கம் செய்வது 92 சதவீதம் வளர்ச்சி கண்டு 770 கோடியாக உயரும். மேலும், 2020-ஆம் ஆண்டுக்குள் இது 2,010 கோடியாக உயரும். சீனாவின் ஆப்ஸ் பதிவிறக்கம் இந்த ஆண்டில் 29 சதவீதம் குறையும். அதே வேளையில் மொத்த பதிவிறக்கம் இந்தியாவை காட்டிலும் சுமார் 6 மடங்க்குக்கு மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜூன்யே, “சந்தையில் வந்து குவியும் குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள், மொபைலுக்கு உதவும் சிறந்த உள்கட்டமைப்பு, மக்கள்தொகை போன்றவற்றால் இந்தியாவில் ஆப்ஸ் பதிவிறக்க வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும்” என தெரிவித்தார்.