October 18, 2021

இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

கணவனின் வயதான பெற்றோரை உடன் வைத்துக் கொள்ளச் சம்மதிக்காத மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று ஒரு வழக்கில் சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மனைவி தற்கொலை மிரட்டல் விடுப்பது போன்ற வேறு சில மனச் சிக்கல்களும் இருப்பதாகத் தெரிவதால் நீதிமன்றம் அந்த விவாகரத்தை அங்கீகரிக்க இது மட்டுமே காரணமில்லை. அந்தத் தனிப்பட்ட வழக்கினுள் நாம் போகத் தேவையில்லை. ஆனால் அந்தத் தீர்ப்பில் கணவனின் பெற்றோரை விட்டுப் பிரிந்து தனியாகச் செல்வது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரானது என்ற வாக்கியத்தையும் சேர்த்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இது தொடர்பாக எழும் சில கேள்விகள்:

culture oct 10

1. நீதிமன்றம் சட்டங்களின்படி ஆதாரங்கள் ஆவணங்களின்படி இயங்கவேண்டிய ஒரு அமைப்பு.இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக ஒரு பெண் நடக்கிறாள் என்பதற்காக விவாகரத்து செய்யலாம் என்றால் இந்திய கலாச்சாரம் நமது சட்டங்களில் எங்கு வரையறை செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது? அல்லது இதை பாராளுமன்றம் சட்டமாக்கி இருக்கிறதா?

2. கந்தர்வ விவாகம் என்ற விஷயம் ஒன்று இருந்தது. கிட்டத்தட்ட ஒன் நைட் ஸ்டேண்ட் மாதிரி. தவிர பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், பலதார விவாகம் இப்படி எல்லாம் நமது கலாச்சாரத்தில் ஒரு காலத்தில் இருந்தன. சட்டங்கள்தான் இவற்றை உடைத்தன. இனி இந்த விவகாரங்களில் நாம் பின்பற்றவேண்டியது சட்டத்தையா அல்லது கலாச்சாரத்தையா என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.

3. முதிய வயதில் ஆதரவற்ற கணவனின் பெற்றோரைத் தவிக்க விடுவது குற்றம் என்றால் அதே நிலையில் அந்த மனைவியின் பெற்றோர் இருந்தால் கணவன் அவர்களை உடன் வைத்துப் பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிடுமா? அதைக் காரணமாக வைத்து மனைவிகள் விவாகரத்துக் கோரத் தொடங்கினால் எத்தனை வழக்குகள் போடுவது? தவிர அது இந்தியக் கலாச்சாரத்துக்கு எதிரான ஒன்றாக இருக்க வாய்ப்பிருக்கிறதே?

4. கலாச்சாரம் என்பதாலேயே ஒரு விஷயம் சட்டப்படி சரியானதாக இருக்க முடியுமா? முத்தலாக் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு இதற்கு எதிர்மாறாக அல்லவா இருந்தது?

5. கடைசியாக, ஒவ்வொரு முன்னூறு கிலோமீட்டருக்கும் மாறிவிடும் மொழி, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் இவற்றுக்கு மத்தியில் இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொதுவாக இந்தியக் கலாச்சாரம் என்ற ஒன்று இருக்கிறதா?

இனி அந்த வழக்குக் குறித்த மினி விபரம்

கர்நாடகாவைச் சேர்ந்த தம்பதியின் விவகாரத்து மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த வழக்கில் மனுதாரரை அவரது மனைவி பெற்றோரை பிரிந்து வருமாறும் இல்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியிருக்கிறார். ஒருமுறை தற்கொலைக்கு முயலும்போது கடைசி நொடியில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இத்தகைய சூழல் கணவனுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு ‘வயது முதிர்ந்த பெற்றோரிடம் இருந்து பிரிக்க முயலும் மனைவியை இந்து மதத்தை பின்பற்றும் கணவர் விவாகரத்து செய்ய சட்டத்தில் இடமுண்டு என்று தெரிவித்தனர். இந்திய நாட்டில் இந்து மதத்தை பின்பற்றும் ஒரு ஆண் அவரது தாய் தந்தையைவிட்டு பிரிந்து வாழ்வது என்பது கலாச்சாரத்துக்கு எதிரானது. அதுவும் பெற்றோர் சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கும்போது மகன் அவர்களை பிரிந்து செல்லவே கூடாது.

பெற்றோரால் சீராட்டி கல்வி கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஆணுக்கு முதுமையில் அவர்களை பேணும் பொறுப்பும், கடமையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் மனைவி கணவரின் குடும்பத்தினருடன் வாழவேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உரிய வலுவான காரணம் இல்லாமல் கணவர் பெற்றோரைப் பிரிந்து தன்னுடன் தனிக்குடித்தனத்துக்கு வரவேண்டும் என மனைவி எதிர்பார்க்கக் கூடாது’ என கருத்து தெரிவித்தனர்.

ஷான்