October 19, 2021

இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகளுக்கு ரத்த சோகை!

ரத்தத்தில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ஹீமோ குளோபினின் அடர்த்தி குறைவதே ரத்தசோகை என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தின் சிவப்பணுக்களுக்குள் இருக்கும் ஒரு புரதம் தான் ஹீமோகுளோபின் இதில் இரும்புச் சத்து இருக்கும். இது தான் ரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கடத்துகிறது. இன்று இந்தியாவில் 70 சதவிகிதம் பேர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர்.

anemic mar 6

இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின் போது அவர்கள் போதிய சத்தின்றி உடல் நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர் என்று ஏற்கெனவே எச்சரிக்கை வெளிவந்திருந்த நிலையில் இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் பாதிக்கு மேற்பட்டோர் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த குடும்ப நல ஆய்வில், 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளில் 58% குழந்தைகள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் போதிய ஹீமோகுளோபின் இல்லாமல், அவர்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியையும் பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.கடந்த 2015-16ஆம் ஆண்டில் சுமார், 6 லட்ச குடும்பங்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரே வயதில் உள்ள 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றி, 21% வீணாகி, 30% எடை குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 12.4 கோடி. இதில் 7.2 கோடி குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டும், 5 கோடி குழந்தைகள் வளர்ச்சி குன்றியும், 2.6 கோடி குழந்தைகள் வீணாகியும், 4.4 கோடி எடை குறைந்த குழந்தைகளும் உள்ளனர். இந்த எண்ணிக்கைகள் கடந்த 2005-06 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே இருப்பதாகவும் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், ‘ஏழ்மையான சமூக-பொருளாதார நிலை’, ‘பொருத்தமற்ற சுகாதாரம்/ஊட்டச்சத்து நிலை’ தான் என தெளிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உணவு பற்றாக்குறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மோசமான சுகாதாரம் காரணமாக குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், உயரத்துக்கு குறைவான எடை, வயதுக்கு குறைவான உயரம், வயதுக்கு குறைவான எடை என இது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

இந்த ஆய்வில், பாதிக்கு பாதி கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதும், அது வயிற்றில் வளரும் கருவையும் பாதிப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 15-49 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தமாக 53% பெண்களும், 23% ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கணக்கெடுப்பு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாறுபடுவதாக கூறப்பட்டுள்ளது. தற்போது உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருவதால், அங்கு மட்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

ஆனால், பீகார், மத்திய பிரதேசம், அசாம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாற்று சண்டிகரில் அதிகளவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல், ஹரியானா, குஜராத் போன்ற மாநிலங்களிலும் அதிகம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 51% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்., கேரள மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது