December 8, 2021

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ‘டுவென்டி-20’ போட்டியிலும் இந்தியா வெற்றி!

நம்ம சென்னையில் நேற்றிரவு வரை நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3வது ‘டுவென்டி-20’ போட்டியில் தவான் (92), ரிஷாப் பன்ட் (58) கைகொடுக்க 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 3-0 என முழுமையாக தொடரை வென்று நம் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட்இண்டீஸ் 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 ‘டுவென்டி-20’ தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இதன் பின் நடந்த ஒருநாள் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா 3-1 என தெடாரை தன்வசப்படுத்தியது. ஐதராபாத்தில் நடந்த இரண்டாவது போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான ‘டுவென்டி-20’ தற்போது நடைபெற்று வருகிறது. முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என முன்னிலை வகிப்பதோடு தொடரை கைப்பற்றி அசத்தியது, இந்த நிலையில், இவ்விரு அணி களுக்கு இடையே 3வது மற்றும் கடைசி போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில், ‘டாஸ்’ வென்ற வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பிராத்வைட் முதலில் ‘பேட்டிங்கை’ தேர்வு செய்தார். வெஸ்ட்இண்டீஸ் அணியில் மாற்றம் ஏதும் இல்லை. இந்திய தரப்பில் பும்ரா, குல்தீப் இடத்தில் சாகல், வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு ஹோப், ஹெட்மயர் இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 51 ரன் சேர்த்த நிலையில், சாகல் ‘சுழலில்’ ஹோப் (24) சிக்கினார். தொடர்ந்து அசத்திய சாகல் இம்முறை ஹெட்மயர் (26) விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மண்ணின் மைந்தன் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ராம்தின் (15) கிளீன் போல்டாக ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

பின் பிராவோவுடன் பூரான் இணைந்தார். இருவரும் இந்திய பந்துவீச்சை விளாசினர். குறிப்பாக பூரான், பந்தை நாலா புறமும் விளாச ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் பறந்தது. பூரான் 24 பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு பிராவோ கம்பெனி கொடுக்க வெஸ்ட்இண்டீஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன் குவித்தது. பிராவோ 43 ரன் (37 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), பூரான் 53 (25 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு றுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன் சேர்த்தது. இந்திய தரப்பில் சாகல் 2, வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட் சாய்த்தனர்.

கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு துவக்கம் சிறப்பாக அமையவில்லை. கீமோ பால் வேகத்தில் கேப்டன் ரோகித் சர்மா (4) எவளியேறி அதிர்ச்சி கொடுத்தார். சற்றே அதிரடியாக விளையாடிய ராகுல் 17 ரன் (10 பந்து, 4 பவுண்டரி) எடுத்து தாமஸ் வேகத்தில் சரிந்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய தவானுடன் இளம் வீரர ரிஷாப் பன்ட் இணைந்தார். இருவரும் எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 36 பந்தில் தவான் அரைசதம் அடித்தார். இவரைத் தொடர்ந்து ரிஷாப்பன்ட் 30 பந்தில் அரைசதம் விளாச அரங்கமே அதிர்ந்தது. இருவரும் தொடர்ந்து விளாச இந்தியாவின் வெற்றி உறுதியானது.

வெற்றிக்கு 7 ரன் தேவை என்ற நிலையில், கீமோ பால் பந்தில் ரிஷாப் பன்ட் கிளீன் போல்டானார். இவர் 58 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தது. அடுத்து மணிஷ் பாண்டே களம் வந்தார். தொடர்ச்சியாக மூன்று பந்தை வீண் செய்த இவர் நானகாவது பந்தில் 2 ரன் எடுத்தார். இதையடுத்து கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ரன் தேவைப்பட்டது. கடைசி ஓவரை பேபியன் ஆலன் வீசினார். முதல் 4 பந்தில் 4 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தில் தவான் 92 ரன் (62 ரன், 10 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த வெளியேறினார். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. பரப்பான கட்டத்தில் பாண்டே வெற்றி ரன்னை எடுக்க ரசிகர்கள் கரகோஷம் எழுப்பி வெற்றியை கொண்டாடினர். இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன் எடுத்து வெற்றி பெற்றது. மணிஷ் பாண்டே (4), தினேஷ் கார்த்திக் (0) வுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட்ண்டீஸ் தரப்பில் கீமோ பால் 2, தாமஸ், ஆலன் தலா 1 விக்கெட் சாய்த்தனர். ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் இரு விருதுகளையும் தவான் வென்று சாதித்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 3  –  0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.