September 20, 2021

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி + சாம்பியன்!

பெங்களூருவில் நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் இன்னிங்ûஸ தொடங்கினர். 4 பந்துகளைச் சந்தித்த கோலி 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவசரப்பட்டு ரன் அவுட்டானார்.ரெய்னா 63: இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார். அவர், மில்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச, ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஜோர்டான் வீசிய 6-ஆவது ஓவரில் ரெய்னா இரு சிக்ஸளை விரட்ட, மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸரை விளாச, அது மைதானத்துக்கு வெளியே பறந்தது. தொடர்ந்து வேகமாக ஆட முற்பட்ட ராகுல், 18 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

india feb 2

இதையடுத்து தோனி களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய ரெய்னா, ஆதில் ரஷித் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார் ரெய்னா. பின்னர் அதிரடியில் இறங்கிய தோனியும் சிக்ஸரை பறக்கவிட, ரெய்னா 45 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 13.3 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்திருந்தது.தோனி 56: இதையடுத்து யுவராஜ் சிங் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய தோனி 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். சர்வதேச டி20 போட்டியில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும்.

இதன்பிறகு அதிரடியில் இறங்கிய யுவராஜ் சிங், ஜோர்டான் வீசிய 18-ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசித் தள்ளினார். தொடர்ந்து வேகம் காட்டிய யுவராஜ் சிங் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு தோனி 36 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் சேர்த்து வெளியேற, கடைசிப் பந்தில் பாண்டியா (4 பந்துகளில் 11 ரன்கள்) ரன் அவுட்டானார். இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 70 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து தரப்பில் மில்ஸ், ஜோர்டான், பிளங்கெட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 203 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் டக் அவுட்டாக, ஜேசன் ராயுடன் இணைந்தார் ஜோ ரூட். ஜேசன் ராய் அதிரடியாக ஆட, 6 ஓவர்களில் 55 ரன்களை எட்டியது இங்கிலாந்து. மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் தோனியிடம் கேட்ச் ஆனார் ஜேசன் ராய். அவர் 23 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் கேப்டன் இயான் மோர்கன். இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. ரெய்னா ஓவரில் மோர்கன் 3 சிக்ஸர்களை விளாச, 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களை எட்டியது இங்கிலாந்து.

14-ஆவது ஓவரை வீசிய சாஹல், அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்த ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. மோர்கன் 21 பந்துகளில் 40 ரன்களும், ஜோ ரூட் 37 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் குவித்தது. எஞ்சிய வீரர்களில் இருவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மூவர் டக் அவுட்டாகினர். இதனால் 16.3 ஓவர்களில் 127 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து. இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 25 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 2.3 ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். 75 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்த இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன. ரன் வித்தியாசத்தின் அடிப்படை யில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் 2-வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஏற்கனவே டெஸ்ட், ஒரு நாள் தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 20 ஓவரையும் இழந்து வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை யுவேந்திர சாஹல் தட்டிச் சென்றார்.