December 8, 2022

இலங்கையில் அதிகரிக்கும் புலனாய்வு; அச்சத்தில் மக்கள்

லங்கையில் அனைத்து மட்டங்களிலும் இராணுவத்தினரின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கவலைகள் அதிகரிக்கின்றன. நாடு முழுவதும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையம் உட்பட பல மனித உரிமை அமைப்புகள் விரிவான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன . ஆனால் இலங்கை அரசோ அதை புறந்தள்ளி தான் நினைப்பதை மட்டுமே தொடர்ந்து செய்து வருகிறது.

இப்போது பாதுகாப்பு படைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களை தேச நலனுக்கான பணி என்று கூறி புலனாய்வு சேகரிப்பிற்க்காக மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது இலங்கை இராணுவம். இதன் முதல் கட்டமாக நாட்டின் மேற்கு பகுதியின் இராணுவ கட்டளைப் பிரதேசத்தில் இருப்பவர்களை இந்தப் பணிக்காக அழைத்துள்ளது.

கடந்த 08 ஜூன் 2021 அன்று மேற்கு கட்டளைப் பிராந்தியத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள காலாட்படை அணிகளுக்கு இரகசிய உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் பணிக்கு மீண்டும் திரும்ப விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்களின் தகவல்களை ஜூன் 14க்கு முன்னதாக அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த உத்தரவின் நகலை தாங்கள் கண்டுள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு ஜே டி எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

`முன்னோக்கிச் செல்லும் உத்தி` என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும்இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த உத்தியின் படி, இதக் கட்டளை பாதுகாப்பு படையினரின் மேற்குத் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையின் மேற்கு பிராந்திய கட்டளைப் பகுதிக்கு உட்பட்ட பிரதேசத்தில் தலைநகர் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள 8 மாவட்டங்கள் உள்ளன. அந்தப் பிரதேசத்தில் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கின்றனர்.

புதிதாக பதிவு செய்யப்படும் முன்னாள் படை வீரர்கள், “உள்ளூர் புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவது, சட்ட விரோத செயல்களுக்கு எதிராகப் போராடுவது (மணல் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவை), இயற்கை பேரிடர் காலங்களில் அவசரக்கால சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் இதர சமூக சேவைகளில் பணியாற்றுவார்கள்“ என்று பிரிகேடியர் ரொஹான் வஜிர பொன்னம்பெரும கையெழுத்திட்டுள்ள அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் தலைநகர் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கணிசமான அளவில் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை கண்காணிப்பதை நோக்கமாக வைத்தே இந்த முன்னெடுப்பு செய்யப்படுகிறது எனும் அச்சங்கள் எழுந்துள்ளன.

2019 நவம்பர் மாதம் கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, இலங்கையில் இராணுவ மயமாக்கல் பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கையாளுவதற்கு என்று கூறப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 25 இராணுவ அதிகாரிகள் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

நாட்டின் கோவிட் தடுப்பு செயலணிக்கு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவே தலைமையேற்றுள்ளார். இலங்கையில் குறைந்தபட்சம் 40 முக்கிய அரச பதவிகளுக்கு முன்னாள் இராணுவத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ஆண்டு ஜனவரியில், ஜே டி எஸ், உண்மைக்கும் நீதிக்குமான சமாதான செயற்திட்டமான ஐடிஜேபி ஆகியவை நிர்வாகத்தில் இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் இடம்பெற்றுள்ளனர் என்கிற விரிவான அறிக்கை யை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி குறைந்தது 40 முன்னாள் இராணுவத்தினர் அரசின் முக்கியமான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.