வருமான வரி அதிகாரிகள், அலுவலர்கள் போல நடிக்கும் மோசடிப் பேர்வழிகள்!

தேர்தல் பரபரப்புக்களுக்கிடையே அன்றாடம் செய்திகளில் இடம் பிடிக்கும் ஒரு விஷயம் – ஐ. டி ரெய்ட். இந்நிலையில் வருமான வரித்துறையினர் போல் போலியாக நடித்து ஏமாற்றும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்து, செல்போன் எண்களையும் அளித்துள்ளது.

அதாவது இந்த எலெக்‌ஷன் டென்ஷனை பயன்படுத்தி வருமான வரித்துறை அதிகாரிகளாகவும், அலுவலர்களாகவும் நடித்து, பொதுமக்களை ஏமாற்றி அவர்களது பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்துச் செல்லும் மோசடி நபர்களைப் பற்றி தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதையடுத்தே இது தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை,   சென்னை வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் இளவரசி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், “”துறை ரீதியான அனுமதியினை முறையாகப் பெற்ற பின்பே வருமான வரித்துறை அதிகாரிகளும், அலுவலர்களும் விசாரணைகளையும், ஆய்வுகளையும், சோதனைகளையும் மேற்கொள்கிறார்கள். ஆனாலும் வருமான வரித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என்று கூறிக் கொண்டு சோதனை நடத்த வருபவர்கள் மீது பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களின் துறை சார்ந்த அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டு, அவர்கள் வருமான வரித் துறையைச் சார்ந்தவர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

வருமான வரித்துறை வழங்கும் அடையாள அட்டையில், அடையாள அட்டை வழங்கும் அதிகாரியின் கையெழுத்தும், பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் தமக்கு சந்தேகம் ஏற்பட்டால், கீழ்க்கண்ட வருமான வரித்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

* எம். முரளிமோகன்,

வருமானவரி இணை ஆணையர் (புலனாய்வு)

வருமான வரித்துறை

தொலைபேசி எண்: 89859 70149

* டி.என். குருபிரசாத்

வருமான வரி அலுவலர் (தலைமையகம்)

(பொதுமக்கள் தொடர்பு)

தொலைபேசி எண்: 94459 53544

பொதுமக்கள், வருமான வரி அதிகாரிகள், அலுவலர்கள் போல நடிக்கும் மோசடிப் பேர்வழிகளிடம் எச்சரிக்கையாக இருக்குமாறும், ஏமாந்து தமது பொருட்களை இழக்க வேண்டாம்” என்று வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.