March 25, 2023

பாகிஸ்தானிலுள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கைப்பற்றிய விவகாரம்!

உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்திய புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைமையகத்தை கைப்பற்றிவிட்டதாக அறிவித்த பாகிஸ்தான், அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் அந்த தகவலை அரசு இணையதளத்தில் இருந்து நீக்கி விட்டது பெரும் குழப்பத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தானே பொறுப்பேற்பதாக அறிவித்த்து.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கை உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதோடு பயங்கரவாதத்துக்கும் பயங்கர வாதிகளுக்கும் பாகிஸ்தான் ஆதரவளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றன. ஐநா பாதுகாப்பு சபையும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பஹவால்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைமையகத் தை பாகிஸ்தான் அரசு கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அரசு இதை செய்துள்ளதாகவும் பாகிஸ்தானின் செய்தித்துறை தகவல் தெரிவித்திருந்தது.

பிரதமர் இம்ரான்கான் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டத்துக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், ஒரு மணி நேரத்துக்குள்ளேயே பாகிஸ்தான் செய்தி தொடர்பு இணையதளத்தில் இருந்து இந்த செய்தி திடீரென்று நீக்கப்பட்டது.

பின்னர் வெளியிடப்பட்ட மற்றொரு அறிக்கையில், பஹவால்பூர் கட்டிட வளாகத்தில் மசூதியும், மதராஸாவும் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்றவர்கள் மற்றும் ஏழைகளுக்கு மத மற்றும் உலகக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளது.ஆனால் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் (DAWN) பத்திரிகை தன்னுடைய தலையங்கத்தில் மஜூர் அஜார் தலையில் இயங்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் கைப்பற்றப்பட்ட செய்தியை குறிப்பிட்டுள்ளது.