விடுதலைப் புலிகள் என்ற காவல் தெய்வங்களை அழித்துவிட்ட நாட்டில், சாத்தான்களின் ஆதிக்கம்!

விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர், தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இருந்தவரையிலும் இலங்கைக்குள் இப்படி ஒரு தொடர் குண்டுவெடிப்புத் தீவிரவாத சம்பவம் நடந்ததில்லை. புலிகள் இயக்கமும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஆனால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொது மக்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருக்கவில்லை. ராணுவ தலைமையிடங்களை, முக்கிய நபர்களைத்தான் அப்படி செய்திருக்கிறார்கள். அதிலும் பொது மக்கள் அதிகம் பாதித்து விடாதபடிதான் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும். அதை மீறி ஒன்றிரண்டு அசம்பாவிதங்கள் நடந்திருக்கலாம். அது வேறு.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, புலிகளின் விமானம் கொழும்பு நகருக்குள், துறைமுகத்தின் மீதெல்லாம் சுற்றி சுற்றித் தாழ பறந்தது. நினைத்திருந்தால் பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கலாம். அப்படி ஏதும் செய்யாமல் வர்த்தக கட்டிடங்கள் மீது மோதிதான் தாக்குதலை நடத்தினார்கள்.

2007 அக்டோபர் 22-ம் தேதி நடந்த அனுராதாபுரம் விமானப்படைத் தள தாக்குதலின் போதும் அப்படித்தான். மிகப்பெரிய தாக்குதல் அது. ஒரே நேரத்தில் தரைவழியாகவும், விமானம் மூலமும் நடத்திய தாக்குதல் அது. கரும்புலிகள் 21 பேரும் பலி. ராணுவம் தரப்பில் 13 பேர் பலி. மொத்த போர் விமானமும் புலிகளால் அழிக்கப்பட்டது.

புலிகளுக்கு உதவி வேண்டி தாழப்பறந்து சென்ற புலிகளின் விமானம் நினைத்திருந்தால் அப்பாவி மக்கள் மீது குண்டுமழை பொழிந்தபடியே சென்றிருக்கலாம். ஆனால் குறித்த ராணுவ இலக்கை மட்டும் தாக்கிவிட்டு திரும்பினார்கள்.

அப்படியான விடுதலைப் போராட்ட இயக்கத்தை ‘தீவிரவாத இயக்கம்’ என முத்திரைக்குத்தி, சர்வதேச துணையுடன் அழித்தொழித்ததின் பலனைத்தான் இப்போது இலங்கை அரசு அனுபவிக்கத் தொடங்கி உள்ளது.

புலிகள் இயக்கம் இருந்தவரை, அந்நிய சக்திகளின் தீவிரவாதம் உள்ளே நுழைய அச்சம் கொண்டிருந்தது. அப்படியே மீறி இறங்கியிருந்தாலும், அது குறித்த புலனாய்வுத் தகவல்களை இலங்கை ராணுவத்திற்கு கொடுத்து உதவியிருக்கின்றது.

இங்கும் ஒன்றை கவனிக்க வேண்டும். புலிகள் இயக்கம் இருந்திருந்தால், ஏதேனும் ஒரு தீவிரவாத இயக்கத்துடன் மறைமுகமாக கைகோர்த்துக் கொண்டு, இலங்கையில் தொடர்ந்து குண்டு வெடிக்கச் செய்து, அந்த நாட்டை அச்சுறுத்தியபடியே வைத்திருந்திருக்கலாம். ஆனால் அப்படி ஏதும், எங்கேயும் செய்ய நினைத்துக்கூட பார்த்ததில்லை தலைவர் வே.பிரபாகரன்.

அதுதான் உண்மையான விடுதலைக் கேட்டுப் போராடிய ‘விடுதலைப் புலிகள் இயக்கம்’!

அப்படியானதை தீவிரவாத இயக்கம் என முத்திரைக் குத்தி அழித்த சிங்கள அரசு, இன்று அதன் பலனை அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. இறந்தவர்களுக்காக வருந்துகிறோம்தான். அப்படி ஒரு சம்பவத்தை எதிர்க்கின்றோம்தான். ஆனாலும் என்ன செய்வது.

விடுதலைப் புலிகள் என்ற காவல் தெய்வங்களை அழித்துவிட்ட நாட்டில், சாத்தான்களின் ஆதிக்கம்தானே இனி தலைதூக்கும்.

பா.ஏகலைவன்