இன் கார் – விமர்சனம்!

இன் கார் – விமர்சனம்!

னிதக் கடத்தல் என்பது போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பின் உலகின் இரண்டாவது மிகப்பெரிய குற்றத்தொழிலாகக் கருதப்படுகிறது. இது நவீன அடிமைத்தனத்தின் ஒரு வடிவம். உலகளவில், வருடந்தோறும் 1.2 மில்லியன் குழந்தைகள் 2 மில்லியனுக்கு அதிகமான இளம்பெண்களும் கடத்தப்படுகிறார்கள். இந்தியா மனித கடத்தலில் அனைத்து நிலைகளிலும் முக்கியத்துவம் வகிக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. அப்படி நம் இந்தியாவில் நடக்கும் பெண் கடத்தல் மற்றும் கற்பழிப்பு சம்பவங்களை மையமாக கொண்டு ஒரு கதை எழுதி இயக்கி இன் கார் என்ற டைட்டிலில் ரிலீஸ் செய்திருக்கும் ஹர்ஷ் வர்தன், இதுபோன்ற குற்ற செயல்கள் எதிர்பாராமல் நடப்பது அல்ல திட்டமிட்டே நடத்தப்படுகிறது, என்பதை தைரியமாக சொல்லியிருக்கிறார். பட்டபகலில், மக்கள் நிறைந்த ஒரு இடத்தில் இருந்து இளம் பெண் கடத்தப்படுவது அதிர்ச்சியளித்தாலும், இதுபோன்ற அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பல நம் சமூகத்தில் நடத்துக்கொண்டு தான் இருக்கிறது, என்பதை சொல்லும் விதமாக அந்த காட்சியை படமாக்கிய இயக்குநரை வெகுவாக பாராட்டலாம்.

இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங், மிக பலமான வேடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். யார் என்றே தெரியாதவர்கள் திடீரென்று காரில் கடத்தி செல்லும் போது, அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்? என்பதை தனது ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்தியிருக்கும் ரித்திகா சிங், அவர்களிடம் இருந்து தப்பிக்க மேற்கொள்ளும் முயற்சியில் அவரது கடுமையான உழைப்பு தெரிகிறது. ரித்திகா சிங்கை கடத்தி செல்லும் சந்தீப் கோயட், மணிஷ் ஜன்ஜோலியா, ஜியான் பிரகாஷ் ஆகிய மூவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, நடிப்பில் காமத்தையும், போதையையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.

கேமராமேன் மிதுன் கங்கோபத்யாய் மிக சவாலான பணியை மிக சாமர்த்தியமாக செய்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள் காருக்குள் நடப்பது போல் இருந்தாலும், அவற்றை பல்வேறு கோணங்கள் மூலம் காட்சிப்படுத்தி போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தி செல்கிறார். சண்டைக் காட்சியையும், ரித்திகா சிங்கையும் மிக இயல்பாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் தனது கடுமையான உழைப்பு மூலம் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார்.மியூசிக் டைரக்டர் மதியாஸ் டூப்ளிஸியின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

பாலியல் குற்ற செயலை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும், அதற்கான எந்தவித தீர்வையும் சொல்லாத இயக்குநர் ஹர்ஷ் வர்தன், பெண்கள் இந்த சமூகத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கான பாதுகாப்பு அவர்கள் மட்டுமே என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். ஆனால் நாயகி ரித்திகா தொடங்கி சகலரும் வட இந்தியர்கள் என்பதால் நம் ஆள் கதை இல்லை என்ற நினைப்பு வந்து போகிறது..

ஆனாலும் ஒரு இளம்பெண்ணுக்கு நேரும் அவலத்தைச் சொல்ல முயன்றிருக்கும் பணி பாராட்டுக்குரியதே

மார்க் 2.25/5

error: Content is protected !!