October 19, 2021

இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பில்லை!

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் பதவியேற்கவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவு கைவிடப்பட்டு உள்ளூர் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் முன்னிலையில் அவரது பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் பாராளுமன்ற தேர்தல் கடந்த ஜூலை 25 ஆம் தேதி நடைபெற்றது. அந்த தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சியமைக்க சில கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டுள்ளதால், சுயேட்சை கட்சிகள் சிலவற்றின் உதவியை அக்கட்சி நாடியுள்ளது. அதன் ஆதரவுடன் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி இம்ரான் கான் பதிவியேற்க இருக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் அமீர் கான், கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரை அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இன்று இம்ரான் கானின் மனநிலை மாறியுள்ளது. ஆடம்பர பதவியேற்பு விழா தனக்கு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் மாளிகையான ஐவான் இ சாதிரில் எளிமையான முறையில் இம்ரான் கான் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். இதன்படி வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்படமாட்டார்கள். இது முற்றிலுமாக தேசிய நிகழ்ச்சியாக இருக்கும். இம்ரான் கானின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே அழைக்கப்படவுள்ளனர். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இம்ரான் கான் விடுத்த அழைப்பை சித்து ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.