October 16, 2021

பாகிஸ்தான் பிரதமராகப் போகும் இம்ரான்கான் பற்றிய மினி குறிப்பு!

செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து , கிரிக்கெட் வீரராக, பிளே பாயாக, சமூக சேவகராக, அரசியல் தலைவராக உருமாற்றம் அடைந்த இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார்.  இந்தப் பொதுத்தேர்தல் முடிவுகள் குறித்து சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர்  நவாஸ் ஷெரிப், இந்தத் தேர்தல் முடிவுகள் “திருடப்பட்டவை” என்றும், “கறைபடிந்த மற்றும் சந்தேகத்திற்குரிய முடிவுகள் நாட்டின் அரசியல் மீது” மோசமான தாக்கத்தை “ஏற்படுத்தக்கூடும் என்றும் ’இது போன்ற போலியான தேர்தல் முடிவுகள் நம் நாட்டு அரசியலில் மோசமான விளைவுகளை உருவாக்கும்’’ எச்சரித்து உள்ளார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், நேற்று முன்தினம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அத்துடன் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்–பக்துங்க்வா ஆகிய மாகாணங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கட்சிகளும், சில பயங்கரவாத அமைப்புகளும் போட்டியிட்டன. ஆனால் தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி (பி.எம்.எல்–என்), முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்–இ–இன்சாப் கட்சி (பி.டி.ஐ.), முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பி.பி.பி.) ஆசிய கட்சிகளுக்கு இடையேதான் மும்முனை போட்டி நிலவியது.

மனித வெடிகுண்டு தாக்குதல், வன்முறை சம்பவங்கள் என பரபரப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே எந்த கட்சிக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 95 சதவீதம் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 110 இடங்களில் பி.டி.ஐ. கட்சியும், 63 இடங்களில் பி.எம்.எல்.என் கட்சியும், 42 இடங்களில் பி.பி.பி. கட்சியும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 19 தொகுதிகளில் மட்டும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 இடங்களில் 272 இடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ளவற்றில் 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் மத சிறுபான்மையினருக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த 70 இடங்களும், நேரடி தேர்தலில் 5 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பெறும் கட்சிகளின் பிரதிநிதித்துவ விகிதாச்சார அடிப்படையில் நிரப்பப்படுகிறது.எனவே அங்கு ஆட்சியமைக்க 172 இடங்களை ஒரு கட்சி பெற வேண்டும். குறிப்பாக நேரடி தேர்தலில் குறைந்தபட்சம் 137 இடங்களையாவது அந்த கட்சி பெற்றிருக்க வேண்டும்.

அந்தவகையில் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் அதிக இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பி.டி.ஐ. சார்பில், அதன் தலைவர் இம்ரான்கான் பாகிஸ்தானின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டணி அமைத்தால் மட்டுமே இம்ரான் கான் பிரதமர் ஆகும் நிலை உள்ளது.

இதனிடையே இம்ரான் கான் ஊடகம் வழியே பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது, “22 வருட போராட்டத்திற்கு பின் இன்று இறுதியில் என்னுடைய கனவுகளை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. முகமது அலி ஜின்னா கனவு கண்ட பாகிஸ்தானை உருவாக்குவதே எனது கனவு. 22 ஆண்டுகள் முன் பாகிஸ்தானின் அரசியல் அமைப்பு சீரழந்து ஊழல் பெருகியதால் நான் அரசியலில் நுழைந்தேன்.

பாகிஸ்தானை மக்கள் நலம் பேணும் மதினாவை போல் உருவாக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். பெண்கள், குழந்தைகள், ஏழை மக்கள் என அனைவரது நலன்களும் பாதுகாக்கும் வகையில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப் படும்” என இம்ரான் கான் கூறினார்.

இம்ரான்கான் வாழ்க்கை மினிக் குறிப்பு:

பாகிஸ்தான் லாகூரில் 1952ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்த இம்ரான் கானின் தந்தை பொறியாளர் என்பதால், செல்வ செழிப்போடு இம்ரான் கான் வளர்ந்தார். தனது 13வது வயதில் இங்கிலாந்து சென்ற இம்ரான் அங்கேயே பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தார். கிரிக்கெட் காதலால் கல்லூரி அணியில் சேர்ந்து கிரிகெட் மட்டையை கையில் பிடித்தார். இம்ரான் கான் தனது 18வது வயதில் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம்பெற்று முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். ஒரு கதாநாயகனுக்கான தோற்றம் அனல் பறக்கும் வேகப்பந்துவீச்சு, பேட்டிங்கில் அதிரடி என திகழ்ந்த இம்ரான் கான் பாகிஸ்தான் மக்களையும் தாண்டி உலகத்தையும் கவர்ந்தார். கூடவே பல இளம் பெண்களுடன் டேட்டிங், அது, இது என்று அலைந்தார்.

1982ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இம்ரான் கான் பொறுப்பேற்ற பிறகு பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது. கிரிக்கெட் வீரராக இருந்தபோதே சமூக நலனிலும் அக்கறை செலுத்தினார் இம்ரான். புற்றுநோய்க்கான இலவச மருத்துவ மனையை உருவாக்குவதே தனது லட்சியம் என அறிவித்தார். லட்சியத்தை நிறைவேற்ற உலகம் முழுவதும் பணம் திரட்டி கனவு மருத்துவமனையை திறந்தார். 1992ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதனால் பாகிஸ்தானின் தனிப்பெரும் ஸ்டாராக உயர்ந்த இம்ரான் கான்,1996ஆம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரீக் இன்சாஃப் என்ற கட்சியை தொடங்கினார்.

பாகிஸ்தான் அரசியல் களத்தில் இம்ரான் கான் சாதிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த போது முதல் தேர்தலில் அவரும், அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தது. 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தலில் தான் இம்ரான் கான் எம்.பி.யானார்.
2007ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் முஷாரப்பால் இம்ரான் கான் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். அவரது அரசியலுக்கு பல தடைகள் உருவாக்கப்பட்டன. தடைகளைத் தாண்டி புதிய பாகிஸ்தானைப் படைப்பேன் என்றார் இம்ரான். 2013 பொதுத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

இம்ரானின் வளர்ச்சியை தடுக்க அவருக்கு எதிராக அரசியல் அரங்கில் காய்கள் நகர்த்தப்பட்டன. இம்ரான் கானின் தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து இம்ரான் தனது மதகுருவையே மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தனர். இது இம்ரான் கானுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதே சமயம் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஷ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தால் தனது பதவியை இழக்க, ஆளும் கட்சி மீது மக்களிடையே அதிருப்தி எழந்தது அதை அறுவடை செய்யும் முயற்சிகளில் இறங்கினார் இம்ரான். அதன் பலனை இப்போது அவர் அடைந்து விட்டார்