August 12, 2022

சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு குறித்து வழக்கு!

சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜூக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டி லேயே வழக்கு தொடரப்படும் எனவும் சமயம் இந்த நீதிபதி இருக்கும்வரை  சுப்ரீம் கோர்ட்டுக்கே போக மாட்டேன் எனவும் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருக்கிறார். இவருடைய செயல்பாடு குறித்து சர்ச்சை நிலவுகிறது. இவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாகவும், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாட்டில் அரசு தலையீடு இருப்பதாகவும் சுப்ரீம் கோர்ட்டைச் சேர்ந்த 4 மூத்த நீதிபதிகள் கடந்த ஜனவரி 12ம் தேதி டெல்லியில் பத்திரிகையாளர்களை கூட்டி பகிரங்கமாக குற்றம்சாட்டினர். நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை கூறினர். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், தங்களை விட குறைந்த அனுபவம் கொண்ட ஜூனியர் நீதிபதிகளிடம் விசாரணைக்கு ஒதுக்கப்படுவதாகவும் இவர்கள் குற்றம்சாட்டினர்.

இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரும் யோசனையை மார்க்சிஸ்ட் கட்சி முதன் முதலில் தெரிவித்தது. அப்போது முதல் இது பற்றி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனை நடத்தி வந்தன. இருப்பினும், நாட்டின் தலைமை நீதிபதி மீது இதுபோன்ற தீர்மானம் கொண்டு வருவது பெரிய இழுக்காக அமைந்து விடும் என்பதால், அதில் தயக்கம் காட்டி வந்தன. இந்நிலையில், பாஜ தலைவர் அமித்ஷா மீதான சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா இறந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் அண்மையில் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கை தொடர்ந்தவர்களின் உள்நோக்கம் பற்றியும் கேள்வி எழுப்பியது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

இதையடுத்து காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட எழு கட்சிகள் ஆதரவுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இக்கட்சி களை சேர்ந்த 71 எம்.பி.,-க்கள் கையெழுத்திட்ட, தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் கண்டனத் தீர்மான நோட்டீஸ் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் கொடுக்கப்பட்டது.

ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை மாநிலங்களவை தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு நிராகரித்துள்ளார்.

இந்நிலையில்தான், தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலேயே காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும்  இது குறித்து கபில்சிபல் செய்தி யாளர்களிடம் கூறியபோது, ‘இனி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவி விலகும் வரை அல்லது பணி ஓய்வு பெறும்வரை சுப்ரீம் கோர்ட் செல்ல மாட்டேன். அவர் எத்தனை நாள் பதவியில் இருக்கிறாரோ அது வரை அங்கே செல்ல மாட்டேன். என்னுடைய வேலைக்கு நான் செலுத்தும் மரியாதை அதுதான் என்று கூறியுள்ளார். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பதவி ஓய்வு பெற இன்னும் ஆறு மாதங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது