March 22, 2023

டிக் டாக் ஆப்-புக்கு ஆப்பு வைக்க மத்திய அரசு முடிவு!

டாப் லெவலில் இருப்பதாக சொல்லும் முகநூலையே முந்தி விடும் போலிருக்கிறது டிக்-டாக் செயலி. சீன தயாரிப்பான ‘டிக் டாக்’ எனப்படும் செயலியில் இசை, பாடல்கள், வசனங்களுக்கு முக பாவனைகளை செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். கல்லூரி மாணவ-மாணவிகள் இதில் ஈடுபாடு காட்டுகிறார்கள் என்றாலும், இதில் 30 வயதிற்கு மேல் உள்ள திருமணம் ஆன பெண்கள் அதிகம் உபயோகப்படுத்துவதாகத் தெரிகிறது. பெரும்பாலும் இரவு 9 மணிக்கு மேல் அதிகாலை 2 மணிவரை டிக் டாக் உபயோகித்து வருவதாக கூறப்படும் நிலையில் அமேசான், வால்மார்ட், ஃபேஸ்புக் போன்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டதை அடுத்து தற்போது மத்திய அரசின் பார்வை டிக் டாக் உளிட்டசீன மொபைல் ஆப்கள் பக்கம் பாய்ந்துள்ளது.

கைபேசி செயலிகள் வங்கி கணக்கு முதல் வாசல் தேடி வரும் உணவுகள் வரை வசதிகளை வாரி வழங்கினாலும், மறுபுறம் கேளிக்கை தொடர்பான பல செயலிகளான டிக் டாக், மியூசிக்கலி போன்ற வற்றால் கலாச்சார சீரழிவுகளும், பாலியல் குற்றங்களும் அரங்கேறுவதை தொடர்ந்து பார்க்க முடிகிறது. அதிலும்  UGC எனப்படும் பயனாளிகளால் உருவாக்கப்பட்ட தரவுகளை கொண்டு இயங்கும் சீன மொபைல் ஆப்களான Tiktok, Vigo, LIKE மற்றும் Helo போன்றவை மிகக் குறைந்த கால அளவிலேயே மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை மிகவும் ஆபத்தாக மாறி வருவதை உணர்ந்து அவை மீதான ஒழுங்குமுறையை வரையறுக்க தற்போது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் படி 50 லட்சத்திற்கும் அதிக பயனாளர்களை கொண்டுள்ள சீன ஆப் நிறுவனங்கள், இந்தியாவில் அலுவலகம் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் சார்பில் பணியமர்த்தப்படும் மூத்த நிர்வாகியே இனி இந்திய செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரையறுத்துள்ளது.

இது தொடர்பாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான கோபாலகிருஷ்ணன், “இது போன்ற ஆப்களில் உருவாக்கப்படும் வீடியோ போன்ற தகவல்களுக்கு யார் பொறுப்பு என்பதே கவலை கொள்ளச் செய்கிறது” என்றார். மேலும் இது போன்ற ஆப் தகவல்களால் தவறான செய்திகள், ஆபாசம், நையாண்டி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் போன்ற சட்டவிரோத செயல்களுக்கு இடமளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Tiktok ஆப்பினை இந்தியாவில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மட்டும் மாதம் ஒன்றிற்கு 15 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் Tiktok ஆப்பின் மோசமான பயன்பாட்டின் காரணமாக இந்தோனேசியாவில் அது தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.