June 21, 2021

என் உடம்பு சரியில்லை-ன்னு சொன்னது பொய்- அமித் ஷா விளக்கம்

மோடியை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வழி வகுத்தவர் என்று சொல்லப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடல் நலம் குன்றிவிட்டதாகவும், அவர் உயிரோடு திரும்புவாரா என்பது கேள்விக்குறிதான் என்றும் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பரப்பி வந்தனர்.குறிப்பாக அவர் சோர்வாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகமாக பரவியது. அமித் ஷா குறித்து வதந்திகளை பரப்பியதற்காக குஜராத் மாநிலம் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தில் தலா இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாகத் தான் நலமுடம் இருப்பதாக அமைச்சர் அமித் ஷா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட விளக்கத்தில், “எனது உடல் நலம் குன்றிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. சிலர் நான் உயிரோடு இல்லை எனக் கூறி வருத்தம் தெரிவித்து ட்வீட்டும் செய்துள்ளனர். இப்படிக் கூறிவந்த அனைவரும் நான் குணமுடன் மக்கள் பணியில் பிஸியாக உள்ளேன் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக “கொரோனா ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, இந்த வேளையிலும் மத்திய அமைச்சர் அமித் ஷா எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை” என சமூக வலைதளங்களில் தொடங்கிய விவாதம் ஒரு கட்டத்தில் “அமித் ஷாவிற்கு உடல் நலம் சரியில்லை”, “அமித் ஷா எலும்பு புற்றுநோய் காரணமாக அவதிப்படுகிறார்”, “அமித் ஷாவை கொரோனா தொற்று தாக்கியுள்ளது” எனப் பொய்ப் பிரச்சாரங்கள் மிகுதியாகி அமித் ஷா உயிரிழந்துவிட்டார் என்றும் சில நாட்களில் மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றெல்லாம் குறிப்பிட்டு வந்தனராக்கும்..