June 30, 2022

காதல் செய் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் இளையராஜா & பாரதிராஜா!

கே.கணேசன் இயக்கத்தில் உருவாகும் படம், ’காதல் செய்’. சுபாஷ் சந்திரபோஸ், நேகா, மனோபாலா, சுவாமிநாதன் உட்பட பலர் நடித்துள்ளனர். கானா வினோதன், குப்பன் கணேசன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா, இளையராஜா ஸ்டூடியோவில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் பாரதிராஜா, பி.வாசு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் பாரதிராஜா பேசும்போது, “காதல்தான் மனதை வளப்படுத்துகிறது. பெரிய கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது. இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா” என்றார்.

இளையராஜா பேசும்போது “எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்றவர் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் உலகத்துல வரல? ஒண்ணுதான் வரும்.

அது என்ன தென்ன மரமா, ஆயிரம் வைக்கறதுக்கு… ஒரு மரத்துல இருந்து இன்னொரு மரம் பொறக்கறதுக்கு… பொறந்து வளரணும்யா… ‘திருவேறு தெள்ளிய ராதலும் வேறு’ங்கற குறள் மாதிரிதான். செல்வம் படைச்சவனா இருக்கறது வேறு. ஆனா, ரொம்ப தெளிந்த அறிவோடு இருப்பது வேறு. திருவேறுனா இன்னொரு அர்த்தமும் இருக்கு. நீ தெய்வமாகக்கூட இருக்கலாம்டா… ஆனா, தெள்ளியராக இருப்பது ரொம்ப கஷ்டம்.

இந்தப் படத்தை எடுக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஒரு படத்தை எடுக்க எவ்வளவு வேணாலும் கஷ்டப்படலாம். படத்தைப் பார்க்கறவங்களுக்குத்தான் கஷ்டம் வரக்கூடாது. ‘காதல் செய்’னு டைட்டில் வச்சிட்டீங்க. காதல் செய்ய பார்க்கறேன். என்னை விட நிறைய காதல் செய்கிறவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனா, எதைக் காதலிக்கணும் என்பதுல நான் ரொம்ப தெள்ளியனா இருக்கேன்.16 வயதினிலே பண்ணும் போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்’ எனப் பேசி விழாவுக்கு வந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தார்.